சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப் பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்ற வரும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை சில கும்பல்கள் பறித்துச் செல்வதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தொழிலாளர்களை சந்திக்கும் கும்பல், அவர்களின் சிறுநீரகங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தருவதாகக் கூறி விலை பேசுவதாகவும், ஒப்புக்கொள்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் எடுக்கப்படுவதாகவும், அவை ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பணக்காரர்களிடம் ரூ.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பொருத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை வழங்கியவர்களில் சிலருக்கு, முன்பணம் போக மீதமுள்ள தொகை வழங்கப்படாத நிலையில், அவர்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து தான் இந்த மோசடி வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது. ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தான் இது குறித்து விசாரணை நடத்தப்போவதாக நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.
மனிதர்கள் உயிர்வாழத் தேவையான முதன்மையான உடல் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. ரூ.1 லட்சத்திற்காக சிறுநீரகத்தையே மக்கள் விற்கத் துணிகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு நடப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தொடர் கண்காணிப்பை தமிழக அரசு மேற்கொண்டிருந்தால், இத்தகைய சிறுநீரகத் திருட்டுகளைத் தடுத்திருக்க முடியும். எனவே, தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.