காரமடை: கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் 2 பேர் உயிரிழந்தனர். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கேரள மாநில சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லை பகுதிகளான பட்டிசாலை, முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காரமடை வட்டார மருத்துவ அலுவலர் சுதாகர் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) சியாமளா மேற்பார்வையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பட்டிசாலை, முள்ளி சோதனைச்சாவடிகளில் கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர். காய்ச்சல் இருந்தால் அவர்களது பெயர், ஊர், தொடர்பு எண், செல்லும் இடம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) சியாமளா கூறுகையில், ‘‘கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் இருவர் பலியானதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லை பகுதிகளான முள்ளி, பட்டிசாலை ஆகிய சோதனைச்சாவடிகளில் தலா ஒரு சுகாதார ஆய்வாளர், மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் 2 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வாகனங்களில் வரும் பொதுமக்களிடம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
காய்ச்சல் இருப்பின் அவர்களது பெயர், ஊர், முகவரி, தொடர்பு எண், செல்லும் இடம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து அவர்கள் எங்கெல்லாம் செல்கின்றனர். என்பதை கண்காணித்து அவர்களை தினமும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக நடந்த சோதனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை. மேலும், இவ்விரு சோதனைச்சாவடிகளிலும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்’’ என்றார்.
The post நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி: தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம் appeared first on Dinakaran.