திருவனந்தபுரம்: பட வெளியீட்டு உரிமை தருவதாக கூறி ரூ. 1.90 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி, டைரக்டர் எப்ரிட் ஷைன் ஆகியோர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் மகாவீர்யர் என்ற படம் வெளியானது. இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரான ஷம்நாஸ் என்பவர் நடிகர் நிவின் பாலி மற்றும் டைரக்டர் எப்ரிட் ஷைன் ஆகியோருக்கு எதிராக வைக்கம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருந்த விவரம் வருமாறு: ஆக்ஷன் ஹீரோ பிஜு 2 என்ற படத்தின் வெளிநாட்டு உரிமைக்காக நான் ரூ.1.90 கோடி பணம் கொடுத்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல் படத்தின் உரிமையை நடிகர் நிவின் பாலியும், டைரக்டர் எப்ரிட் ஷைனும் சேர்ந்து வேறு ஒருவருக்கு ரூ. 5 கோடிக்கு விற்று விட்டனர்.எனவே இது தொடர்பாக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் நிவின் பாலி மற்றும் டைரக்டர் எப்ரிட் ஷைன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய தலயோலப்பரம்பு போலீசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இருவர் மீதும் தலயோலப்பரம்பு போலீசார் 406, 420 மற்றும் 34 ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தனக்கு எதிரான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்றும், வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் நடிகர் நிவின் பாலி கூறியுள்ளார்.
The post படத்தின் வெளிநாட்டு உரிமை தருவதாக கூறி ரூ.1.90 கோடி மோசடி செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது புகார்: போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.