திருவொற்றியூர்: சென்னை மாதவரம் மூலக்கடை முதல் ஆந்திரா புறநகர் பேருந்து நிலையம் வரை உள்ள ஜி.என்.டி.சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. பொன்னியம்மன்மேடு, ஜி.என்.டி.சாலை சந்திப்பில் குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் திட்டப்பணிகள் நடைபெற்றபோது சாலை நடுவில் சுமார் 12 அடி நீளத்துக்கு பள்ளம் தோண்டி குழாய்கள் பதித்தனர். இதன்பிறகு பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் அந்த இடத்தில் மீண்டும் சாலை போடாமல் விட்டுவிட்டதால் பள்ளமாக கிடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பதுடன் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதியுறுகின்றனர். மேலும் மாணவ, மாணவிகள், தனியார், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
‘’நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். ‘’குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் விட்டதால் வண்டிகள் ஓட்ட முடியவில்லை. நடந்துசெல்லக்கூட சிரமமாக உள்ளது. எனவே, பள்ளத்தை மூடி சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
The post பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் தவிப்பு: மாதவரம் ஜிஎன்டி சாலை சீராகுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.