திருவள்ளூர்: பள்ளிப்பட்டு வட்டப் பகுதிகளில் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்று, பள்ளிப்பட்டு வட்டம். ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள இந்த வட்டத்தில், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகள் மற்றும் 33 ஊராட்சிகள் உள்ளன. இந்த வட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
மலையும் மலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், பள்ளிப்பட்டு வட்டப் பகுதிகளை ஒட்டியுள்ள ஆந்திர வனப்பகுதிகளில் இருந்து இரை தேடி வரும் குரங்குகள் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்துவருவதால் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.