சென்னை: தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியை தொடங்கி வைத்து, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் முனைவு பயிற்சியுடன் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக நிதி உதவிகளை அளித்து வருகிறது. இந்த விழாவில், புத்தாக்கபற்று சீட்டுதிட்டத்தின் கீழ் 15 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50 மாணவ குழுக்கள் என மொத்தம் 65 புதிய கண்டுபிடிப்புககளுக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் உதவி தொகையும், பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் நம் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளான ரோபோ ரோடு ரோலர், பல்நோக்கு விவசாய கருவி, கப்பல் ஊழியர்களுக்கான பாதுகாப்பு பெல்ட், சவுண்ட் கன், அன்னாச்சி பழம் அறுவடை கருவி, மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் என பல்வேறு கண்டுபிடிப்புகள் இடம் பெற்றுள்ளது. உலக நாடுகளுடன் நாம் போட்டி போடுவதற்கு புதிய கண்டுப்பிடிப்புகள் அவசியம்.
ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக்காக வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை நடப்பாண்டு முதல் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், அவற்றை தயாரித்து – சந்தைப்படுத்த வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 470 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு ரூ.12 கோடியே 10 லட்சம் உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாணவ குழுக்களின் சிறந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.40.50 லட்சம் பரிசுத்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.