ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் இன்று ஆடி மாத முதல் ஞாயிறை முன்னிட்டு கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று கூழ்வார்த்தல் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து, 20 ஆயிரம் பெண்களுக்கு மங்கலப் பொருட்களை வழங்கினார்.பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இந்தாண்டுக்கான 14 வாரங்கள் கொண்டாடும் ஆடித்திருவிழா கடந்த 17ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இத்திருவிழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பேருந்து, வேன்,
ஜீப், லாரி உள்பட பல்வேறு வாகனங்களில் ஏராளமான மக்கள் சனிக்கிழமை இரவு வந்து தங்கி, மறுநாள் காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம்வந்தும் ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதனால் பவானியம்மன் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில், பவானியம்மன் திருக்கோயிலில் இன்று ஆடி மாத முதல் ஞாயிறை முன்னிட்டு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், 20 ஆயிரம் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் அனிதா, உதவி
ஆணையர் சிவஞானம், அறங்காவலர் அஞ்சன லோகமித்ரா, செயல் அலுவலர்கள் பிரகாஷ், மாதவன், தாசில்தார் ராஜேஷ்குமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆடி மாத ஞாயிறு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு, மாவட்ட நிர்வாகிகள் வி.பி.ரவிக்குமார், கேவிஜி.உமாமகேஸ்வரி, வழக்கறிஞர்கள் முனுசாமி, சீனிவாசன், சுமன், அப்புனு, ராஜேஷ், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஏராளமான மக்கள் கூழ்வார்த்து அம்மனுக்கு படையலிட்டு, அனைத்து பக்தர்களுக்கு வழங்கினர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post பவானியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா; 20 ஆயிரம் பெண்களுக்கு மங்கலப் பொருட்கள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.