கோவை, ஜூலை 10: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் அடிக்கடி, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன. இதனிடையே, கடந்த சில நாட்களாக கெம்பனூர், ஓணாப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை, குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த ஆண் காட்டு யானை, ஓணாப்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்திற்குள் நுழைந்த அந்த யானை, உணவு தேடி சுற்றியது. இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று, காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தோட்டத்து வீடுகளில் ஆட்கள் வசித்து வரும் நிலையில் காட்டு யானை அடிக்கடி நுழைந்து விளைபொருட்களையும், ரேசன் அரிசி, கால்நடை தீவனங்கள் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பாக்கு தோட்டத்திற்குள் புகுந்து உணவு தேடிய காட்டு யானை: கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.