satyamscam1

ஒருகாலத்தில் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் நட்சத்திரங்களில் ஒன்றாக மின்னிய ‘சத்யம் கம்ப்யூட்டர்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பி. ராமலிங்க ராஜு, அவருடைய சகோதரரும் நிர்வாக இயக்குநருமான பி. ராம ராஜு, இன்னொரு சகோதரர், தணிக்கையாளர்கள் 3 பேர், மற்றும் சத்யம் நிறுவனத்தின் ஊழியர்கள் என்று மொத்தம் 10 பேர் கோடிக் கணக்கில் மோசடி செய்த குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளை மோசடியாகத் திருத்தியதற்காகவும், லாபத்தை மிகைப்படுத்திக் காட்டியதற்காகவும், முதலீட்டாளர்களை இத்தகைய பொய்த் தகவல்களால் ஏமாற்றியதற்காகவும், ஆயிரக் கணக்கான பங்குதாரர்களை நம்பிக்கை மோசடி செய்ததற்காகவும் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 5.5 கோடி அபராதமும் ராமலிங்க ராஜுவுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியத் தொழில்துறை வரலாற்றில், சொந்த நிறுவனத்திலேயே மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றிருக்கும் முதல் தொழிலதிபர் ராமலிங்க ராஜு. இந்த ஊழலைச் செய்ததை ராமலிங்க ராஜுவே ஒப்புக்கொண்டாலும் அவர் மீது யாருக்கும் அனுதாபம் ஏற்படவேயில்லை. இந்த மோசடியை இனியும் தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்ட சூழலிலேயே அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இந்தியத் தொழில் உலகமே பெரிதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த ராமலிங்க ராஜு, ஒரே நாளில் அதல பாதாளத்துக்குப் போனார். 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு விரிந்து பரந்திருந்த ‘சத்யம் கம்ப்யூட்டர்ஸ்’ நிறுவன சாம்ராஜ்யம் பெரும் சரிவைச் சந்தித்தது. (எனினும், ‘மஹீந்திரா’ நிறுவனத்தின் துணை நிறுவனம் அதை வாங்கிக்கொண்டு இப்போது அதை நல்ல நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது.) ஒரு நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளுக்காக அதன் தணிக்கையாளரைத் தண்டிப்பது வழக்கமில்லை. இந்த முறை அது நடந்திருக்கிறது. இதுவும் நல்லதொரு அறிகுறிதான். மோசடி செய்யக் கற்றுக்கொடுப்பதும், தொழிலதிபர்கள் செய்யும் மோசடிகளுக்குத் துணைநிற்பதும், மோசடி நடக்கிறது என்பதைத் தெரிந்திருந்தும் அதுகுறித்து உரிய அரசு அமைப்புகளுக்குத் தெரிவித்து உடனே தடுத்து நிறுத்தத் தவறியதும் பிறர் மீதுள்ள குற்றச்சாட்டுகள்.

இப்போது ராஜு வழக்கில் குற்றவாளிகள் நீதி முன் நிறுத்தப்பட்டு, அவர்களுடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், தண்டனை போதுமானதுதான் என்று சொல்ல முடியவில்லை. தவிர, இன்னொரு அபாயத்தையும் இந்த வழக்கு இந்தியர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறது: இந்திய கார்ப்பரேட் துறையில் முடைநாற்றமடிக்கத் தொடங்கியிருக்கும் ஊழல்கள்தான் அது. எல்லோரையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டியதன் அவசியத்தையும் பெருநிறுவனங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ராஜுவின் வழக்கு உணர்த்துகிறது.

எது எப்படியோ மோசடிகளில் ஈடுபடும் பெருநிறுவனங்கள்கூட தண்டனைக்குள்ளாவது நல்ல அறிகுறி. ஆனால், பெருநிறுவன மோசடிகள், ஊழல்கள் – நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சத்யம், சஹாரா போன்றவை பூனைகளைப் போன்றவைதான். இந்திய நீதித் துறையின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால் பூனைகள் மட்டுமல்ல; யானைகளும் சிக்க வேண்டும்!

– தி இந்து

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *