பொருளாதாரரீதியாக நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும், 124-வது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மொத்த இட ஒதுக்கீடு 50% என்ற அளவைத் தாண்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் விதித்துள்ள உச்ச வரம்பை மீறும் வகையில் இருப்பதால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்குமா என்பது அடுத்த கேள்வி.
இந்திரா சஹானி வழக்கில், பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10% இடங்களை ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ரத்துசெய்தது. ஒரு வகுப்பினரின் பின்தங்கிய நிலைமையைத் தீர்மானிக்க பொருளாதாரப் பின்புலம் மட்டுமே ஒரு காரணமாக இருக்க முடியாது என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, 10% ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் என்று உச்ச வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் உயர் வருவாய்ப்பிரிவினர் (கிரீமி லேயர்) என்று அடையாளம் காணப்படுபவர்களுக்கு இதே வருமான வரம்பு அமலில் இருக்கும் நிலையில், முன்னேறிய வகுப்பினருக்கும் அதே அளவில் வரம்பு விதிப்பதும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.நாகராஜ் (2006) வழக்கில், அரசியல் சட்ட அமர்வு அளித்த தீர்ப்பு, சமத்துவம் என்பது இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. இட ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் இடங்களின் உச்சவரம்பு 50%-க்கும் அதிகமானால், அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற அம்சம் அடிபட்டுப்போய்விடும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.
இதையொட்டியே பல தீர்ப்புகள் வெளிவந்துள்ளன.மேலும், இடஒதுக்கீடு பெறாத சமூகங்களின் ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று காட்ட அரசிடம் தரவுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. வரலாற்றுரீதியாக வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும், சமூகரீதியாக ஒதுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் நீதி வழங்கத்தான் இடஒதுக்கீடு.
அப்படியிருக்கும்போது சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு, வருமானம் குறைவு என்பதற்காக மட்டும் இடங்களை ஒதுக்க வேண்டுமா என்பது மிக முக்கியமான கேள்வி. அப்படி ஒதுக்கலாம் என்றால், தேசம் தழுவிய வலுவான விவாதம், அதன் அடிப்படையிலான ஏற்பாடுகள், ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பிலுள்ள கோரிக்கைகள் ஆகியவற்றுடன் சேர்த்து செய்யப்பட வேண்டியது அது. தேர்தல் கணக்குகளை முன்வைத்து இப்படியான நடவடிக்கைகளில் ஓர் அரசு இறங்குகிறது என்றால், இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதன் நோக்கம் நீர்த்துப்போய்விடும் என்பதைத்தான் அழுத்தம்திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது!