
“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது” என்று தன்னை விமர்சித்த யூடியூபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் கவுரி கிஷன்.
‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் 'அதர்ஸ்' என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது தனது உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், நடிகர் கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. கவுரிக்கு ஆதரவாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கவுரியும் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

