பொள்ளாச்சி : ஆழியார் ஆற்றில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை உள்ளது. இந்த அணைக்கு தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இன்று காலை சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவ, மாணவிகள் 25 க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளனர். பின்னர், ஆழியார் பூங்காவை சுற்றிப்பார்த்துவிட்டு. அணைப்பகுதியில் தண்ணீர் வெளியேறும் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றனர்.
அப்போது, கல்லூரி மாணவர் ஆண்டோ ஜெனிப் தனியாக குளிக்க சென்றுள்ளார். உற்சாகத்தில் குளிக்க சென்ற அவர் தண்ணீரில் சிக்கி தத்தளித்துள்ளார். அதனை பார்த்த தருண், ரேவந்த் ஆகிய மற்ற இரண்டு மாணவர்களும் ஆண்டோ ஜெனிப்பை காப்பாற்ற விரைந்து தண்ணீரில் குதித்தனர். அவர்களும் தண்ணீரில் சிக்கி உயிருக்கு தத்தளித்தவாறு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து உடனடியாக ஆழியார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 3 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக கோட்டுர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில் 3 கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர்கள் இறந்த உடலை பார்த்த உடன் வந்த மாணவர்கள் கதறி அழுத காட்சி பார்ப்போரை கலங்க வைத்தது. இது குறித்து ஆழியார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பொள்ளாச்சி அருகே ஆழியார் ஆற்றில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.