*வியாபாரிகள் விரக்தி
திருப்பூர் : திருப்பூர் பெருமாள் கோவில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த கடைகளுக்கு மல்லிகைப்பூ நிலக்கோட்டை ஆண்டிப்பட்டி, சத்தியமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், அரளி பூ சேலம் பகுதிகளில் இருந்தும், செவ்வந்தி, ரோஸ் உள்ளிட்ட பூக்கள் ஓசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாளொன்றுக்கு 2000 முதல் 4000 கிலோ வரை விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
திருப்பூரில் செயல்பட்டு வரும் இந்த பூ மார்க்கெட்டிற்கு திருப்பூர் மாநகரம் மட்டுமல்லது அவிநாசி, பல்லடம், தாராபுரம், ஊத்துக்குளி, குன்னத்தூர், காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்வது வழக்கம். கடந்த மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததன் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில வாரங்களாக கோடைகாலம் தொடங்கி இருப்பதால் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதன் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை குறைத்து விற்பனை செய்யப்பட்டாலும் கூட அதிகமான விசேஷங்கள் இல்லாததால் வாங்கி செல்வதற்கு கூட்டம் இல்லாததால் பூக்கள் விற்பனை மந்தமடைந்துள்ளது.
ஒரு சில பூக்கள் இருப்பு வைத்து விற்க முடியாததன் காரணமாக போதிய வியாபாரம் இல்லாததால் மறுநாள் குப்பையில் கொட்டப்படுகிறது. அதன்படி நேற்று திருப்பூர் பூ மார்க்கெட் பின்புறம் உள்ள குப்பை தொட்டியில் சம்மங்கி, செவ்வந்தி, கோழி கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டிருந்தது.
இது குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘‘பனிக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கியதன் காரணமாக பூவரத்து அதிகரித்துள்ளது. ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால் இருப்பு வைக்க முடியாத பூக்கள் குப்பையில் கொட்டப்படுகிறது. தற்போது விலை குறைந்திருந்தாலும் வாங்கிச் செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக விவசாயிகளும், வியாபாரிகளும் மிகப்பெரும் அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.
மல்லி உள்ளிட்ட சில வகை பூக்கள் விற்பனை ஆகாவிட்டாலும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் மூலம் நஷ்டம் ஓரளவு ஈடுகட்ட முடிகிறது. ஆனால், சம்பங்கி, செவ்வந்தி, கோழிகொண்டை உள்ளிட்ட பூக்கள் மறு பயன்பாடு இல்லாத காரணத்தால் குப்பையில் கொட்டப்படுகிறது” என்றனர்.
The post போதிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள் appeared first on Dinakaran.