மும்பை: குஜராத் விமான விபத்து அறிக்கை வெளியான நிலையில், வெளிநாட்டு ஊடகங்கள் விமானிகள் மீது பழிபோடுவதை வாடிக்கையாகி விட்டது என்று நடிகை குல் பனாக் காட்டமாக தெரிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 242 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.
விமான விபத்து விசாரணை பணியகம் வெளியிட்ட 15 பக்க முதற்கட்ட அறிக்கையின்படி, விமானம் 180 நாட்ஸ் வேகத்தை எட்டிய சில நொடிகளில் இரண்டு இன்ஜின்களும் செயலிழந்துள்ளன. இன்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தும் ‘கட்ஆஃப்’ சுவிட்சுகள் ஒரே நேரத்தில் இயங்கியுள்ளன. இதனால் விமானம் மின்சார சக்தியை முழுமையாக இழந்ததை உறுதி செய்யும் வகையில், அவசரகால கருவியான ‘ராம் ஏர் டர்பைன்’ தானாகவே இயங்கியுள்ளது. பறவைகள் மோதியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது இன்ஜின்கள் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், எந்த ஒரு உறுதியான முடிவும் எட்டப்படவில்லை.
ஆனாலும், பிபிசி, ராய்ட்டர்ஸ், தி கார்டியன் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், விசாரணை அறிக்கையில் உள்ள தொழில்நுட்ப விவரங்களைப் புறக்கணித்துவிட்டு, எரிபொருள் ‘கட்ஆஃப்’ சுவிட்சுகள் இயங்கியதை மட்டும் முன்னிலைப்படுத்தி, விமானிகளே தவறு செய்திருக்கலாம் என்ற கோணத்தில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதுபோன்ற செய்திகள் போயிங் நிறுவனத்தின் மீதான பழியைத் திசை திருப்பும் முயற்சி என இணையத்தில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாலிவுட் நடிகையும், பொழுதுபோக்காக விமானியாக இருந்து வரும் குல் பனாக் அளித்த பேட்டியில், ‘பொதுவாக விமான விபத்துகளில், விமானிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பதால், இறுதியில் அவர்கள் மீது பழி சுமத்தப்படுவதுதான் சோகம். இன்ஜின் செயலிழப்பு போன்ற அவசரகாலச் சூழல்களைச் சமாளிக்க விமானிகளுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படும். விபத்தின்போது விமானியின் அவசர கால அழைப்பு அவர் நிதானத்துடனேயே செயல்பட்டதைக் காட்டுகிறது’ என்று காட்டமாக தெரிவித்தார்.
விமான விபத்து ெதாடர்பான இறுதி அறிக்கை வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலையில், குல் பனாக் கணித்தபடியே விமானிகள் மீது பழி சுமத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது என்று சிலரும் கருத்து ெதரிவித்து வருகின்றனர்.
The post போயிங்கை காப்பாற்ற நடக்கும் சதியா? விமானிகள் மீது பழிபோடும் வெளிநாட்டு ஊடகங்கள்: விமானி-நடிகை குல் பனாக் காட்டம் appeared first on Dinakaran.