உத்திரப்பிரதேசம்: மகா கும்பமேளாவுக்கு 16,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 45 நாட்கள் நடந்த கும்பமேளாவில், 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். நிறைவு நாளான நேற்று மட்டுமே ஒன்றரை கோடிக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக பணியாற்றிய ரயில்வே தொழிலாளர்களை பாராட்டுவதற்காக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்திற்கு சென்று, அங்குள்ள ரயில்வே அதிகாரிகளை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கடைசியாக 2019ம் ஆண்டு நடந்த கும்பமேளாவின்போது, 4 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த முறை இதனை விட 3 மடங்கு கூடுதலாக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டது. எனினும், 4 மடங்கு கூடுதலான ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்த கும்பமேளாவில் 5 கோடி பயணிகள் 16,000க்கும் அதிகமான ரயில்களில் அழைத்து வரப்பட்டு, பின்னர் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடப்பட்டனர். இதில் பெரிய சாதனை என்னவெனில், மாநில மற்றும் ஒன்றிய அரசின் அனைத்து துறைகள் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளனர். இதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதியை ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
The post மகா கும்பமேளாவுக்கு 16,000 ரயில்கள் இயக்கம்.. அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேட்டி!! appeared first on Dinakaran.