மதுரை:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டு மரணம் அடைந்த வழக்கை சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்குமாருடன் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் அருண், அஜித் நண்பர்கள் பிரவீன், வினோத், அஜித்தின் தம்பி நவீன்குமார், கோயில் ஊழியர் கார்த்திகைவேல் ஆகிய 5 பேரும் மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.
அதன்படி 5 பேரும் மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று காலை ஆஜராகினர். அவர்களிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சாட்சிகள் அளித்த பதில் விபரங்களை உடனுக்கு உடன் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து கொண்டனர்.
* கைதான ஏட்டு செல்போன் பறிமுதல்
மடப்புரம் கோயில் ஊழியர் அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றப்பிரிவு ஏட்டு ராஜாவின் வீடு திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிபிஐ குழுவினர், ராஜாவின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அவர் புதிதாக கட்டி வரும் வீடு குறித்த ஆவணங்களை அவரது மனைவியிடம் கேட்டு வாங்கினர். ராஜாவின் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து தடயவியல் ஆய்விற்கு அனுப்ப உள்ளனர்.
The post மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு 5 பேரிடம் 8 மணிநேரம் சிபிஐ தீவிர விசாரணை appeared first on Dinakaran.