மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கத் தேவையில்லை எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மூத்த ஐபிஎஸ் அதிகாரி விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி 83வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதில் தமிழ்நாடு காவல் துறை விசாரணை முறையாக நடைபெறாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, ‘`இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடந்து வருகிறது. தொடர்புடைய மாநகராட்சி ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் நேர்மையான முறையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். எனவே, சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘மாநகராட்சி வரி விதிப்பில் முறைகேடு என்பது மதுரையில் மட்டும் நடைபெறுவதில்லை. தமிழ்நாடு முழுவதும் இதுபோல நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்ததாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. வரி விதிப்பில் முறைகேடு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையரே புகார் அளித்துள்ளார். அவர் 16.9.2024ல் புகார் அளித்துள்ளார். 7 மாதம் தாமதமாக 17.6.2025ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த முறைகேட்டில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. இதையடுத்தே மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும். முழு உண்மையையும் வெளிக்கொண்டு வர வேண்டும். முறைகேட்டில் தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். இதனால் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை தொடரலாம். ஆனாலும், இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் உள்ளிட்ட 7 பேரை பதவி விலக உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த விசாரணை நேர்மையாக நடைபெறும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டிய தேவை இல்லை. ஏற்கனவே சிபிஐ வசம் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழக காவல் துறையே இந்த வழக்கை விசாரணை செய்தால் போதுமானது. சிபிஐ வசம் ஒப்படைத்தால் விசாரணையை முடிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எல்லா அதிகாரிகள் மீதும் நம்பிக்கை வைக்காமல் இருப்பது சரியல்ல. சிபிசிஐடி விசாரணையும் தேவையில்லை. இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகள் விசாரணை செய்தால் சரியாக இருக்காது என்பதால், தென்மண்டல ஐஜியை இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்க்கிறது. அவருடன், மதுரை போலீஸ் கமிஷனர் இணைந்து, மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை நேர்மையாக நடத்தி, அறிக்கையை ஜூலை 25ல் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் 2 பேர் கைது
மதுரை மாநகராட்சி வரி வசூல் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே, மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். புகாருக்குரிய 350 வரிவிதிப்புகள் சார்ந்த பைல்களின் விபரங்கள் நகராட்சி நிர்வாக ஆணையர், துறைச் செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தொடர் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதையடுத்து நேற்று மாநகராட்சி மண்டலம் 1ல் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களான மதுரையை சேர்ந்த ரவி(56), மண்டலம் 5ல் பணியாற்றிய கருணாகரன்(52) ஆகியோர் கைதாயினர்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு தவறுதலாக இறப்புச்சான்று வழங்கிய வழக்கில் ரவி தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: மூத்த ஐபிஎஸ் அதிகாரி விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.