மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் 11ம் நாள் நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி-சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வரும். அதனை ஒவ்வொரு நாளும் மக்கள் திரளாக கூடி தரிசிப்பார்கள்.
சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகள், மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் வைபவம் மே 6ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறு கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. மேலும், விழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த விழாவை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை தரிசித்தனர்.
இந்நிலையில், 11ம் நாளான இன்று மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேரோட்டம் கோலாகலமாக நடைப்பெற்றது. காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அதிகாலையிலே மதுரை மாநகரம் முழுவதும் மீனாட்சி சுந்தரர் வாரே வா… ஹர ஹர சுந்தரர் வாரே வா… என்ற விண்ணை முட்டும் கோஷங்களுடன் கூடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கும் பிரம்மாண்டமான திருத்தேர், அலங்காரத்துடன் ஆடி அசைந்து வருவதை பார்க்கும் பொழுது அம்புட்டு அழகாக காட்சியளித்தது. முருகனும், விநாயகரும் நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கிறார்கள். அசைந்தாடும் தேரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்வையிட்டு வருகிறார்கள்.
The post மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: அசைந்தாடும் திருத்தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்! appeared first on Dinakaran.