சென்னை: மன்மோகன் சிங் நினைவிடம் தொடர்பான அவரது குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தார் அவருக்கு நினைவகம் கட்டுவதற்குரிய இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியதை பா.ஜ.க. அரசு நிராகரித்துள்ளது. இது அவரது உயர்ந்த தொண்டையும், அவரது சீக்கிய சமூகத்தையும் நேரடியாகவே அவமதிக்கும் செயலாகும்.
அவரது குடும்பத்தார் வைத்த கோரிக்கையை மறுத்து, இரு முறை பிரதமராக இருந்த தலைவரின் இறுதிச் சடங்கு நிகழ்வைச் சாதாரணமாக நிகம்போத் காட்-இல் வைத்து நடத்தியிருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆணவத்தையும், பாரபட்சத்தையும் காட்டுகிறது. இது, அவரது பெரும் பங்களிப்புகளை மக்களின் நினைவில் இருந்து அகற்ற முனையும் அப்பட்டமான முயற்சியாகும். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களது தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைத்துக் கோடிக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்தது.
இத்தகைய உயர்ந்த தலைவரை அவமதிப்பது என்பது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதற்குச் சமமாகும். பெருந்தலைவர்களை அவமதிக்கும் கறை வரலாற்றில் இருந்து என்றும் மறையாது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post மன்மோகன் சிங்கின் மகத்தான பங்களிப்பை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.