சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிக அளவு பதிவாகி வந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமெடுக்க தொடங்கியிருக்கிறது. அதன்படி தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 22ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வரும் 23 முதல் 25ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன்படி இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் நாளை நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டத்தின் மழைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 33- 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் 22ம் தேதி வரையும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் ஒரு சில பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாள் மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் appeared first on Dinakaran.