*கூடலூர் விவசாயிகள் வலியுறுத்தல்
கூடலூர் : கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வடவயல், தேன்வயல், இருவயல், குனில் வயல், ஏச்சம் வயல், புத்தூர் வயல் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி, அள்ளூர் வயல், மாக்குமூலா, கோடமூலா, தோட்டமூலா, கோத்தர் வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக வருட கணக்கில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக விவசாயிகள் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
விவசாயிகளின் நிரந்தர விவசாய வருமான பயிர்களான தென்னை, பாக்கு மற்றும் வாழை, மரவள்ளி, நெல், காய்கறி உள்ளிட்ட விவசாய பயிர்களை காட்டு யானைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றன.
ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக 6 யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு புகுந்து காலை நேரத்தில் அங்கிருந்து வெளியேறுகின்றன.
முதுமலை வனப்பகுதியில் 2 காட்டு யானைகள், மாக்குமூலா பகுதியில் 3 காட்டு யானைகள் கிராமங்களை ஒட்டிய சிறு வனப்பகுதியில் முகாமிட்டு இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் வனத்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கும்போது பேச்சுவார்த்தை நடத்தும் வனத்துறையினர் அப்போது முழுவீச்சில் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் பின்னர் அதில் தொய்வு ஏற்படுகிறது. தொடரும் யானைகள் நடமாட்டத்தால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து விவசாயத்தை மேற்கொள்வதிலும் அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டி, மீண்டும் கிராமங்களுக்குள் வராத வண்ணம் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்ககோரி இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த சில வருடங்களுக்கு முன்கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்டு முதுமலையில் விடப்பட்ட விநாயகன் யானை இங்குள்ள அனைத்து தென்னை மரங்களையும் சாய்த்து சேதப்படுத்தி விவசாயிகளை நட்டமடையச் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக முதுமலையில் இருந்து காட்டு யானைகள் அதிகளவில் ஊருக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வன எல்லையில் அமைக்கப்பட்டுள்ள அகழியை முறையாக சீரமைத்து பராமரிக்காமலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அகழிகளை ஒட்டி மின்வேலி அமைக்காமலும் வனத்துறையினர் விவசாயிகளின் கோரிக்கையை புறக்கணித்து வருவது இதற்கு முக்கிய காரணம் ஆகும் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வேறு தொழில் வாய்ப்புகள் இல்லாத இப்பகுதியில் விவசாயத்தை நம்பியே முழுமையாக விவசாயிகள் மற்றும் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இப்பகுதி பாரம்பரிய விவசாயிகளின் விவசாய பயிர்களையும் உடைமைகளையும் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post யானைகள் அட்டகாசம் தடுத்து நிறுத்த வேண்டும் appeared first on Dinakaran.