விழுப்புரம்: ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவிக்கு 10 நாளுக்கு ஒரு முறை சார்ஜ் போட்டது யார்? என்று அன்புமணி ஆதரவு எம்எல்ஏ கேள்வி எழுப்பி உள்ளார். பாமகவில் தந்தை, மகன் மோதல் நீடித்து வரும் நிலையில் கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு சென்றுள்ளது. இருவரும் மாறி மாறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நிலையில், ராமதாஸ் தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக கூறினார், அதனை துப்பறியும் நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
இது குறித்து இறுதி அறிக்கை வரும் 17 அல்லது 18ம் தேதி பாமக நிறுவனர் ராமதாசிடம் அளிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், நேற்று விழுப்புரத்தில் அன்புமணி ஆதரவு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சிவக்குமார் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் வீட்டில் பொருத்தப்பட்ட ஒட்டு கேட்பு கருவி குறித்து விசாரணை நடத்த சொல்லி இருக்கிறோம்.
பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலுவும் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த கருவி பொருத்தியது யார் என்பது குறித்து விரைந்து விசாரணை நடத்தி தெரிவிக்க வேண்டும். ராமதாஸ் வீட்டில் பொருத்தப்பட்ட ஒட்டு கேட்பு கருவிக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்ய வேண்டும்.
அன்று கூட தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த அன்புமணி அவரது தாயை சந்தித்து விட்டு உடனே புறப்பட்டு சென்று விட்டார். அப்போது அந்த கருவிக்கு சார்ஜ் போட்டது யார் என்பதை காவல்துறை விசாரணை நடத்தி கண்டுபிடித்து தெரிவிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.
* எல்லாரும் எங்க பக்கம்… கட்சியே எங்களுக்குதான் ராமதாஸ் டம்மி… அன்புமணிதான் எல்லாம்…
சிவக்குமார் எம்எல்ஏ கூறுகையில், பாமகவை பொறுத்தவரை 90% தொண்டர்கள் அன்புமணி பக்கம் தான் இருக்கிறார்கள். ராமதாசிடம் சதி திட்டம் தீட்டுபவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அன்புமணி பக்கம் தான் தமிழகம் முழுவதும் பாமக இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்களை பொறுத்தவரை பாமகவுக்கு தலைவர் அன்புமணி மட்டும்தான்.
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை 2022ம் ஆண்டு பாமக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியும், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர்தான் நிர்வாகிகள். பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் தலைவர், பொதுச்செயலாளருக்கு தான் இருக்கிறது. 108 மாவட்ட செயலாளர்களும் அன்புமணியுடன் தான் இருக்கிறார்கள். அதேபோல் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரிடம் இருப்பார்கள் என்று தான் தேர்தல் ஆணையமும் பார்க்கும்.
5 எம்எல்ஏக்களில் 3 பேர் அன்புமணி பக்கம் தான் இருக்கிறார்கள். எனவே அன்புமணி தான் பாமகவின் தலைவராக தொடர்வார் என்பதை தேர்தல் ஆணையமும் அறிவிக்கும். கூட்டணியை பொறுத்தவரை அன்புமணியும், ராமதாசும் முடிவு செய்து அவர்கள் தலைமையில்தான் அமையும். கட்சிக்கு நிறுவனர் ராமதாஸ் தான். ஆனால் தலைவர் பதவியை உருவாக்கியவரே அவர்தான். எனவே பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார்.
சேலம் எம்எல்ஏ அருளை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அன்புமணி நீக்கி உத்தரவிட்டுள்ளார். எனவே அவர் கொறடாவாக பதவியில் நீடிக்க முடியாது என்று என்னை கொறடாவாக நியமித்து சபாநாயகரிடம் 3 எம்எல்ஏக்கள் சேர்ந்து மனு அளித்தோம். அந்த மனு தற்போது பரிசீலனையில் உள்ளது. இந்த மனு மீது சபாநாயகர் நியாயமான முறையில் முடிவெடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். நான் சட்டமன்றத்தில் கொறடாவாக தொடருவேன்’ என்றார்.
* ராமதாஸ் திடீர் சென்னை வருகை
ராமதாஸ் நேற்று காலை மனைவி சரஸ்வதியுடன் தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி இல்ல விழாவில் கலந்து கொள்ளவே அவர் சென்னை சென்றதாக கூறப்படுகிறது. வரும் 16ம் தேதி வரை சென்னையில் இளைய மகள் கவிதா வீட்டில் தங்கி இருக்கும் ராமதாஸ், தன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டு கேட்பு கருவி சம்பந்தமான தனியார் துப்பறியும் நிறுவனத்தின் அறிக்கை கிடைத்த பிறகு கட்சியின் முன்னணி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்திவிட்டு காவல் துறை உயர் அதிகாரியை சந்தித்து புகார் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
* ராமதாஸ் பெயரை பயன்படுத்துவதால் போலீசில் புகார்?
பாமகவில் தந்தை, மகன் மோதல் உச்சத்துக்கு வந்த நிலையில் தன்னுடைய பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது. என்னுடைய இன்சியலை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ராமதாஸ் அறிவித்திருந்தார். இருப்பினும் அன்புமணி மற்றும் ஆதரவாளர்கள் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் ஹேக் செய்து, பாஸ்வேர்டுகளை மாற்றி பயன்படுத்தி வருவதாக டிஜிபியிடம் ராமதாஸ் புகார் அளித்து உள்ளார். இந்த சூழலில், நேற்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சிவக்குமார் எம்எல்ஏவும் ராமதாஸ் பெயரை உச்சரித்து பேசினார். தொடர்ந்து ராமதாஸ் பெயரை வைத்து அன்புமணி ஆதரவாளர்கள் அரசியல் செய்து வருவதால் ராமதாஸ் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
The post ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவிக்கு 10 நாளுக்கு ஒரு முறை சார்ஜ் போட்டது யார்? கொளுத்தி போடும் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ appeared first on Dinakaran.