சென்னை: இருபது லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் கூடுதல் விவரங்களை திரட்டுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 11ம்தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி உதவி ஆய்வாளர்கள் ராஜாசிங் மற்றும் சன்னிலாய்டு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர் எந்த புகாரும் அளிக்காத நிலையில், வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் 70 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளனர் என்று வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் இருவரும் இந்த வழக்கின் முக்கிய நபர்கள் என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மனுதாரர்களுக்கு எதிராக வாக்கு மூலம் அளித்துள்ளார். எனவே, அது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று வாதிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை திரட்டுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு: 2 எஸ்.ஐகள் தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரிக்க வேண்டும்.! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.