திருச்சி: திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஞ்சப்பூரில் ரூ.408 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து முனையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 9ம் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில் இந்த பஸ் நிலையம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
காலை 6 மணிக்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி சென்னை சென்ற பேருந்தை கொடியசைத்து அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். இதையடுத்து பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் தற்காலிக ஏடிஎம் இயந்திரத்தை பார்வையிட்ட அவர், பின்னர் மேல்தளத்தில் டவுன் பஸ்கள் இயக்கத்தையும் துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் ேக.என்.நேரு அளித்த பேட்டி: பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து மாநகருக்கு இயங்கும் பேருந்துகளில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தே கரூர், பெரம்பலூர் செல்லும் பேருந்துகளை இயக்கி கொள்வதாக தெரிவித்து விட்டனர். மற்ற பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்து இயக்கப்படுகிறது.பஞ்சப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் சென்று விட்டு தான் செல்லும். தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பேசி விட்டோம். அனைத்து தனியார் பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்துக்கு வந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ரூ.408 கோடியில் கட்டப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது appeared first on Dinakaran.