* கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கூட்டம் குறையும்
பெரம்பூர்: கடந்த 20 ஆண்டுகளாகவே மருத்துவமனைகளின் தேவை என்பது அதிகரிக்க தொடங்கி விட்டது. இதற்கு பெருகிவரும் உணவு கலாச்சாரம், உடற்பயிற்சி இன்மை போன்றவை காரணமாக அமைகின்றன. வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனையை தேடி சென்று மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால், வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும்பாலும் நம்பியிருப்பது அரசு மருத்துவமனைகளையே. அந்த வகையில் சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என நான்கு மருத்துவமனைகள் மிகப்பெரிய மருத்துவமனைகளாக செயல்பட்டு வருகின்றன. இங்கு சென்னையை சேர்ந்த மக்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பொதுமக்கள் வந்து தங்கியிருந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.
இதனால் எப்பொழுதும் இந்த நான்கு மருத்துவமனைகளிலும் கூட்டம் அதிக அளவில் இருக்கும். மேலும், விபத்து எங்கு நடந்தாலும் பெரும்பாலும் ஆம்புலன்ஸ்கள் இந்த மருத்துவமனை நோக்கியே செல்லும். இதனால் எப்பொழுதும் இந்த மருத்துவமனைகள் பரபரப்பாக இருக்கும். வடசென்னையில் மேலும் ஒரு மருத்துவமனை வேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கை இருந்து வந்தன. ஆனால், அவை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் வடசென்னையில் செயல்பட்டு வந்த சிறிய அளவிலான பெரியார் நகர் அரசு மருத்துவமனையை பெரிய மருத்துவமனையாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன அந்த வகையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை கடந்த 1986ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. கடந்த 37 வருடங்களாக 100 படுக்கை வசதியுடன் சிறிய அளவில் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனையை சீரமைத்து பெரிய மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி, திமுக ஆட்சி அமைந்ததும் 300 படுக்கை வசதியுடன் பெரியார் நகர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு புதுப்பொலிவுடன் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி பல்வேறு சிறப்பு வசதியுடன் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையை புனரமைப்பதற்கு முன்பு நாள்தோறும் ஆயிரம் முதல் 1500 புறநோயாளிகள் வீதம் வருடத்திற்கு 4.5 லட்சம் பேர் வந்து சிகிச்சை பெற்று சென்றனர். இந்நிலையில் மருத்துவமனை புனரமைக்கப்பட்ட பின்பு நாளொன்றுக்கு 2000 முதல் 2500 புறநோயாளிகள் வீதம் ஆண்டிற்கு 6 லட்சம் புறநோயாளிகள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். மேலும் உள்நோயாளியாக ஆரம்ப காலகட்டத்தில் தினசரி 60 முதல் 70 பேர் சிகிச்சை பெற்றனர். ஆனால் தற்போது நாளொன்றுக்கு நூறு முதல் 150 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்டிற்கு 12 ஆயிரம் நோயாளிகள் நல்ல முறையில் சிகிச்சை பெற்று திரும்புகின்றனர்.
ஏற்கனவே இந்த மருத்துவமனையில் 25 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, 12 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், 24 மணி நேரமும் இயங்கும் ஆய்வகம் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த மருத்துவமனையை மேலும் விரிவுபடுத்த கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்து, இதற்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள 2 லட்சத்து 12 ஆயிரத்து 890 சதுர அடி இடத்தில் 556 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை கட்டுவதற்காக முதலில் 8-3-2023 அன்று தரை மற்றும் 3 தளங்கள் கட்டுவதற்காக ₹55.07 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். அதன் பின்பு பல சிறப்பு வசதிகள் செய்வதற்காக அதே கட்டிடத்தில் 4, 5, 6 என மேலும் 3 தலங்கள் அமைப்பதற்காக 7-3-2024 அன்று சுமார் 54.82 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ஆறு தலங்களுடன் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தரைத்தளத்தில் 7650 சதுர அடி பரப்பில் பிரமாண்ட பார்க்கிங் வசதியும் 20 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் செயல்பட உள்ளது. மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கான ஓபி சீட்டு வழங்கும் மையம், ஆலோசனை அறை, சலவை கூடம் உள்ளிட்டவை தரை தளத்தில் இயங்க உள்ளது. முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, நவீன ரத்த வங்கி, அறுவை சிகிச்சை அரங்கம், போதை மறுவாழ்வு மையம் உள்ளிட்டவை செயல்பட உள்ளது. இரண்டாவது தளத்தில் முழு உடல் பரிசோதனை, கட்டண வார்டு, பெண்கள் பொது மருத்துவ பிரிவு, குழந்தைகள் நல மருத்துவ பிரிவு, தனிமைப்படுத்துதல் வார்டு உள்ளிட்டவை செயல்பட உள்ளது. மூன்றாவது தளத்தில் பிரசவ வார்டு மற்றும் பிரசவத்திற்கு பின் பெண்கள் தங்கும் வார்டு, மகப்பேறு மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு, குழந்தைகள் நல மருத்துவ பிரிவு உள்ளிட்டவை செயல்பட உள்ளது. இதேபோன்று நான்காவது தளத்தில் ஆண்கள் பொது மருத்துவ பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, எக்ஸ்ரே மற்றும் கட்டண வார்டுகள் செயல்பட உள்ளது.
ஐந்தாவது தளத்தில் இதயவியல் பிரிவு, இதயவியல் தீவிர சிகிச்சை பிரிவு, தோல் நோய் பிரிவுகள் செயல்பட உள்ளன. ஆறாவது தளத்தில் சிறுநீரகம், ரத்தக்குழாய் உள்ளிட்டவைகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோய்க்கான பிரத்யோக வார்டு, நரம்பியல் பிரிவு, அட்மின் அலுவலகம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாக பிரித்து நோயாளிகள் சிரமம் அடையக் கூடாது என்பதற்காக அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு வசதிகள் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைக்கு இணையாக அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு இந்த மருத்துவமனை முழுவதும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொளத்தூர் தொகுதி மட்டுமல்லாது, வடசென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உளளது.
முன்பெல்லாம் வடசென்னை மக்கள் ஏதாவது உடல் சார்ந்த பிரச்னைகள் என்றால் ஸ்டான்லி அரசு மருத்துவமனை நோக்கி செல்ல வேண்டிய சூழல் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது கொளத்தூரிலும் ஸ்டான்லி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை போன்று மிக பிரமாண்டமாக மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ள காரணத்தால் இது வடசென்னை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தற்போது சிறிய அளவில் செயல்பட்டு வந்த புறநகர் மருத்துவமனை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து கொளத்தூர் பெரியார் நகருக்கு மக்கள் தினந்தோறும் வந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு பகுதிகளில் இருந்து பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் குறிப்பாக வடசென்னை பகுதிகளான வியாசர்பாடி, கண்ணதாசன் நகர், எம்கேபி நகர், மாதவரம், செங்குன்றம், வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் பேருந்துகளை இயக்கினால் அப்பகுதி மக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். அதே நேரத்தில் இந்த மருத்துவமனைக்கு என்று தனியாக மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு அந்த மருத்துவக் கல்லூரியின் கீழ் பெரியார் நகர் அரசு மருத்துவமனை செயல்பட்டால் அது புதிதாக தொடங்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன வசதிகள்
இந்த மருத்துவமனையில் நவீன வசதிகளாக மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவு, செயற்கைக் கை கால்கள் தயாரிக்கும் கூடம், போதை மறுவாழ்வு மையம், நவீன ரத்த வங்கி, முழு உடல் பரிசோதனை, ஆஞ்சியோ அரங்கம், டயாலிசிஸ், எண்டோஸ்கோபி, மத்திய ஆய்வகம், நவீன அறுவை சிகிச்சை அரங்கம், எம்ஆர்ஐ ஸ்கேன், லேசர் சிறுநீரக கல் அகற்றுதல், சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பார்வையாளர்கள் தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
யாருக்கெல்லாம் நன்மை
பெரியார் நகர் அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வருவதால் கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வடசென்னையை தாண்டி திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, அம்பத்தூர், மாதவரம், செங்குன்றம் போன்ற பல்வேறு இடங்களில் உள்ளவர்களுக்கு இந்த மருத்துவமனை மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு வரை அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் ஜிஎச் அல்லது ஸ்டான்லி மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போது கொளத்தூரில் பொது மருத்துவமனை அமைந்துள்ளதால் இது இவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்சென்னைபோல வடசென்னையிலும்…
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தென்சென்னை தொகுதி மக்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிண்டியில் கலைஞர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை உருவாக்கியது. அதேபோல வடசென்னை மாவட்ட மக்களுக்கு குறிப்பாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பெரியார் அரசு புறநகர் மருத்துவமனையை தற்போது ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஜிஎச் போல மிகப் பெரிய மருத்துவமனையாக மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய அளவிலான பார்க்கிங் தேவை
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பார்க்கிங் என்பது ஒரு பிரச்னையாக உள்ளது. தற்போது பொது அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் தினசரி ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். மேலும் நோயாளிகளை பார்ப்பதற்கும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் அதிகப்படியான மக்கள் வருவார்கள். மருத்துவர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள். அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு மிகப்பெரிய அளவில் மல்டி பார்க்கிங் வசதி செய்து தரப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
கொளத்தூரில் ‘பெரியார்’ தற்போது பெரியார் குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை கூறி வந்த நிலையில் பெரியார் நகர் அரசு மருத்துவமனை இனி பெரியார் மருத்துவமனை என்று அழைக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே வருங்காலத்தில் கொளத்தூரில் பெரியார் என்ற பெயர் தினந்தோறும் பலரும் பயன்படுத்தும் பெயராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
The post வடசென்னை மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியது; கொளத்தூரில் ரூ210 கோடியில் பிரமாண்ட அரசு மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.