பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் சட்டமன்ற பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வக்கீல் கே.பாலு உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேலும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த கடிதத்தையும் அவரிடம் வழங்கினார்.

பின்னர் வெளியே வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செயற்குழுவில் தீர்மானம்

கடந்த வாரம் சனிக்கிழமை பா.ம.க.வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ஐகோர்ட்டு ரத்து செய்தது குறித்தும், அடுத்தக்கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, எனது தலைமையில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் அடங்கிய 7 பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தான் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினோம்.

மீண்டும் ஒரு சட்டம்

இந்த சந்திப்பின்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை எடுத்து கூறினோம். முதல்-அமைச்சருடனான சந்திப்பு நல்ல முறையில் அமைந்தது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தினோம்.

சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதியின் அனுமதிக்கு செல்ல தேவையில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், தரவுகள் சரியாக இல்லை என்று கூறியுள்ளது. அதை முறையாக சேகரிப்பதுடன், விரைவில் சட்டசபையிலும் சட்டம் கொண்டுவர வேண்டும்.

சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

முதல்-அமைச்சரும் எங்களிடம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ள தரவுகளை தமிழக அரசால் ஒரு வாரத்திற்குள் சேகரிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இடஒதுக்கீடு ஏன் வேண்டும்?

அதனைத்தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், ‘‘மூத்த வக்கீல்களை கொண்டு அரசு வாதாடவில்லை என்று அ.தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளதே?’’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அன்புமணி ராமதாஸ், ‘‘மூத்த வக்கீல்களைத்தான் தமிழக அரசு அமர்த்தியிருந்தது. இந்த வழக்கை தமிழக அரசு நல்ல முறையில் கையாண்டது. தமிழகத்தில் 2 பெரிய சமுதாயங்கள் வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும்தான். அதில், அவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைத்துவிட்டது. வன்னியர்களுக்குத்தான் இன்னும் கிடைக்கவில்லை. அதனால்தான், அவர்கள் பின்தங்கி உள்ளனர். வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கினால், அவர்களும் உயருவார்கள், தமிழகமும் முன்னேறும்’’ என்றார்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *