வால்பாறை: வால்பாறை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் நீர் நிலைகளை தேடி குடியிருப்பு பகுதிக்குள் படையெடுக்கும் வன விலங்குகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகம், வால்பாறை வனச்சரகம் என இரண்டு வனச்சரகம் உள்ளது. வால்பாறை பகுதி கடல் மட்டத்திற்கு மேல் 1200 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு, சிறுத்தை, புலி, கரடி, யானை, காட்டுமாடு, மான் போன்ற வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும். இதனால், வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடும். வனப்பகுதிக்குள் உள்ள சிற்றோடைகளிலும் தண்ணீர் அதிகளவு இருக்கும். இதனால், வனவிலங்குகளுக்கு தேவையான நீர் வனப்பகுதிக்குள் கிடைப்பதால் பெரும்பாலும் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதில்லை. இந்நிலையில், தற்போது வால்பாறை பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் சில பகுதிகளில் புதர் காடுகள் காய்ந்து உள்ளது.
அவைகள் தற்போது தீப்பிடித்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையில் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப், பொள்ளாச்சி, அமராவதி, உடுமலை உள்ளிட்ட 6 வனச்சரகங்கள் உள்ளடக்கிய பகுதியாகும். இப்பகுதிகளில் நீர் ஆதாரமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் பகுதிகளான வால்பாறை, அக்காமலை புல்மேடு, சின்னக்கல்லார் உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை குறைந்ததை முன்னிட்டு அணைக்கட்டுகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. வால்பாறை பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை புல்மேடு பகுதியில் இயற்கை ஊற்றுகள் வற்றி நீர்வரத்து இல்லாமலும், நீர் குறைந்தும் காணப்படுகிறது. காட்டாறு ஊற்றுகளும் வற்றி உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெயில் காரணமாக குறைந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
சோலையார் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 10 கன அடி நீர் மட்டுமே வரத்து உள்ளது. 165 அடி உயரம் உள்ள அணையில் 2 அடி நீர் மட்டம் உள்ளது. இதனால், வனவிலங்குகள் நீர் நிலைகளை தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும், பொள்ளாச்சி- வால்பாறை சாலை, வால்பாறை பகுதிகளில் உள்ள அனைத்து எஸ்டேட் சாலைகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது. இதனால், வால்பாறையில் மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. மேலும், கடந்த மாதம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி வால்பாறை அடுத்துள்ள வாட்டர் பால்ஸ் பகுதியில் காட்டுயானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறிகையில், ‘‘வால்பாறை பகுதியில் தற்போது வறட்சி நிலவி வருகிறது.
இதனால், வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வரத்தொடங்கியுள்ளது. வனத்துறை சார்பாக வனப்பகுதிக்குள் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க சிறிய தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதிக்குள் காட்டுத்தீ ஏற்படாத வகையில் வனப்பகுதிக்குள் தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம், வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு வேட்டை தடுப்பு காவலர்கள் 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.’’ என்றார்
வனவிலங்குகளின் தொல்லை அதிகரிப்பு
வால்பாறை பகுதியில் வனப்பகுதியில் உள்ள சிறிய தாவரங்கள் காய்ந்து வருகிறது. தற்போது, வனப்பகுதிகளில் புதர் காடுகள் காய்ந்து உள்ளது. அய்யர்பாடி வனப்பகுதி, ரொட்டிக்கடை சிலுவை மேடு, வில்லோனி பள்ளத்தாக்கு உள்ளிட்ட எஸ்டேட் எல்லைப் பகுதியில் உள்ள புதர் காடுகள் காய்ந்து காணப்படுகிறது. ஆழியார், அட்டகட்டி உள்ளிட்ட, கடல் மட்டத்திற்கு மேல் 400 மீட்டருக்கு குறைவாக உள்ள பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் இடம் பெயர்ந்து 800 மீட்டருக்கு மேல் உள்ள பசுமை மாறா மழைக்காடுகள் பகுதிகளுக்கு வருகிறது. குறிப்பாக செந்நாய்கள், யானைகள், மான்கள் உட்பட விலங்கினங்கள் பசுமையை நோக்கி படையெடுத்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதியில் வன விலங்குகள் தொல்லை குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து உள்ளது. எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தேயிலை தோட்ட பகுதிகளில் வலம் வருகிறது. இந்நிலையில் வனவிலங்குகள் கடல் மட்டத்திற்கு மேல் 800 மீட்டர் உயரத்திற்கு மேற்பட்ட வனப்பகுதிகளில் தஞ்சம் அடைய துவங்கியுள்ளது.
The post வால்பாறை வனப்பகுதியில் கடும் வறட்சி; நீர் நிலைகளை தேடி குடியிருப்பு பகுதிக்குள் படையெடுக்கும் வன விலங்குகள்: காட்டுத் தீ ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.