திருப்பரங்குன்றம்: முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 10ம் தேதி முதலாவது யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று 6 மற்றும் 7ம் கால யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடந்தன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை 3.30 மணிக்கு மங்கள வாத்தியம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து அதிகாலை 3.45 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை துவங்கி 4.45 மணிக்கு மஹா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு யாகசாலையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் புனித நீரை எடுத்துக் கொண்டு 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் புறப்பாடாகின்றனர். 5.25 மணியளவில் 7 நிலை கொண்ட 125 அடி உயர ராஜகோபுர கலசங்கள், மற்றும் கோவர்த்தனாம்பிகை, பசுபதீஸ்வரர், வல்லப கணபதி ஆகிய விமானங்கள் மற்றும் பெரிய மணி, கல்யாண விநாயகர் ஆகிய இடங்களில் உள்ள கும்பங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
பின்னர் காலை 6 மணிக்கு மூலவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு மஹா தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நடை திறக்கப்படும். இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக 14 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நடை அடைப்பு இன்று கிடையாது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரம், முகப்புகள், அங்குள்ள தெருக்கள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருப்பரங்குன்றம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
கும்பாபிஷேகத்தை பார்வையிட 26க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா சைஸ் எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 2,000க்கும் அதிகமான கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதியாக பார்க்கிங் தயார் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர். இன்று சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் தலைமையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* இரண்டு ஆயிரம் கிலோ மலர்களால் தோரணம்
கோயில் வாசல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுமார் 2 ஆயிரம் கிலோ மலர்களால் மாலைகள், தோரணங்கள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோயில் மண்டபங்களின் முகப்புகளில் பல்வேறு மலர்கள், நாவல் உள்ளிட்ட பழங்களை கொண்டும் தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.
* 5 லட்சம் பேருக்கு அறுசுவை அன்னம்
இன்றைய கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், அமைச்சர் பி.மூர்த்தி ஏற்பாட்டின் பேரில், காலை மற்றும் மதியம் 5 லட்சம் பேர் சாப்பிடும் வகையில் அன்னதானம் தயார் செய்யப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் நகர் முழுவதும் சுமார் 16 இடங்களில் உள்ள மண்டபங்களில் உணவு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்; முருகனின் முதல் படை வீட்டில் கோலாகலமாக தொடங்கியது கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.