
‘த தின்மேன்’ தொடரின் 4-வது படம், ஷேடோ ஆஃப் த தின் மேன் (Shadow of the Thin Man – 1941). கொலையைக் கண்டுபிடிக்கச் சொன்னவர்தான், கொலையாளி என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் லைன். நிக், ஓய்வு நேரத்தைக் கழிக்க, மனைவி நோராவுடன் குதிரைப் பந்தயம் நடக்குமிடத்துக்குச் செல்கிறார். அங்கு குளியலறையில் ஒரு ‘ஜாக்கி’ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
போலீஸாரும், பத்திரிகையாளர்களும் பரபரப்பாகக் கூடியிருக்க, லெப்டினன்ட் ஏப்ரம்ஸ் அந்த கேஸை விசாரிக்கிறார். பந்தயக் குழுவின் துணை இயக்குநராகப் பதவி ஏற்றிருக்கும் மேஜர் ஸ்கல்லியும் , பால் என்ற பத்திரிகை நிருபரும் ஜாக்கியின் கொலையைச் விசாரிக்கச் சொல்லி, நிக்கின் வீடு தேடி வருகிறார்கள். சூதாட்டக் குழுவை நடத்தும் லிங்க் ஸ்டீபன்ஸ் மற்றும் ஃபிரட் மேஸியுடன் ஜாக்கி ஒத்துப் போகாததால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற வதந்தியை வைத்து நிக் விசாரிக்கிறார்.

