புதுடெல்லி: தொழில்நுட்பத்தின் அதிகப்படியான மற்றும் பிரச்னைக்குரிய பயன்பாட்டினால் அடிமையாகும் குழந்தைகள், இளைஞர்களுக்கு உதவ மேம்பட்ட ஆராய்ச்சி மையம் அமைக்கும் பரிந்துரைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, நாட்டிலேயே முதல் முறையாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதிய ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை வழிநடத்தும் டாக்டர் யதன் பால் சிங் பல்ஹாரா கூறியதாவது: அதிகப்படியான இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால், குழந்தைகள், இளம் பருவத்தினர் இடையே மனநலப் பிரச்னை அதிகரிக்கிறது.
இதிலிருந்து குழந்தைகளை பாதுகாத்து அவர்களின் மனநலனை மேம்படுத்த பள்ளி மற்றும் குடும்ப அளவிலான நடவடிக்கைகள் அவசரத் தேவையாக இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தும் வகையில் புதிய ஆய்வு மையம் எய்ம்சில் அமைய இருக்கிறது. இந்த மையம் பல்வேறு அடிமையாக்கும் நடத்தைகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். மேலும், தொழில்நுட்பம், செல்போன்களால் ஏற்படும் மன சோர்வு, பதற்றம், அடிமையாவதை குறைக்க உதவும் வழிமுறைகளை உருவாக்குவோம்’’ என்றார்.
The post ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள்: ஆராய மையம் துவக்கம் appeared first on Dinakaran.