
புதுடெல்லி: டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 2,900 கிலோ வெடிபொருட்கள் ஹரியானாவில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்கள் சிலருக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக காஷ்மீர், ஹரியானா, குஜராத், உத்தர பிரதேச போலீஸார் கடந்த 15 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின்போது குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஆசாத், சுகைல், மருத்துவர் அகமது சயீது ஆகிய 3 தீவிரவாதிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி சுபைன் உத்தரவின்பேரில் 3 பேரும் பணம், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

