சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனை நீங்கள் கவனியுங்கள். உங்கள் நலனை கவனிக்க இந்த அரசு இருக்கிறது என்று உறுதியுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப்பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 25 மருத்துவர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.