சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசியதற்கு, “மக்களோடு இருப்போம்” என விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்தார். இத்தகைய கருத்து பரிமாற்றங்களால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தென்னிந்திய வழக்கறிஞர்கள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசியவர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: இந்திய குற்றவியல் சட்ட பெயர்களில் இண்டியா கூட்டணி நினைவுபடுத்தப்படுவதால், தங்களது கட்சிப் பெயரின் முதல் வார்த்தையான பாரதிய என்ற வார்த்தையை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் சட்டத்தின் பெயரை மாற்றியுள்ளனர். இந்தியை மறைமுகமாக திணிக்கும் நோக்கமும் தெரிகிறது. இவற்றில் உள்ள பாதகங்களை கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கையை பெற்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.