தமிழகத்துக்கு 6-வது இடம்: 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கியது. 38 அணிகளைச் சேர்ந்த10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த தொடர் நேற்று நிறைவு பெற்றது. இதில் சர்வீசஸ் அணி 68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. மகாராஷ்டிரா 54 தங்கம், 71 வெள்ளி, 73 வெண்கலம் என 198 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஹரியானா 48 தங்கம், 47 வெள்ளி, 58 வெண்கலம் என 153 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. தமிழ்நாடு அணி 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என 92 பதக்கங்களுடன் 6-வது இடத்தை பிடித்தது. போட்டியை நடத்திய உத்தராகண்ட் 24 தங்கம், 35 வெள்ளி, 44 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் 7-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது.
பாட்மிண்டனில் இந்தியா தோல்வி: ஆசிய கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் சீனாவில் கிங்டாவோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்தியா, ஜப்பானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஷ்டோ ஜோடி 13-21, 21-17, 13-21 என்ற செட் கணக்கில் ஹிரோகி மிடோரிகாவா, நட்சு சைட்டோ ஜோடியிடம் தோல்வி அடைந்தது. மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மாளவிகா பன்சோத் 12-21, 19-21 என்ற செட் கணக்கில் மியாசாகியிடம் வீழ்ந்தார். தொடர்ந்து ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரனாய் 21-14, 15-21, 21-12 என்ற செட் கணக்கில் கென்டா நிஷிமோடாவிடம் தோல்வி அடைந்தார்.