நாகர்கோவில்: நாகர்கோவில் ஜங்சன் ரயில்வே விரிவாக்க பணிக்கு 4 லட்சம் டன் மண் தேவையுள்ள நிலையில் தினமும் 400 டன் மண் வருவதால் பணிகள் மந்தாகதியில் நடந்து வருகிறது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் முனைய விரிவாக்க திட்டம் கடந்த 2023ம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் இன்னும் முனைய விரிவாக்க பணிகள் முடிக்கப்படவில்லை. இந்த பணிகள் மந்த கதியில் நடப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இது தவிர ரயில்கள் பராமரிக்க தேவையான பிட்லைன்கள், ஸ்டேபிளிங் லைன்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
முனைய விரிவாக்க பணிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னரே கூடுதல் பிட்லைன்கள், ஸ்டேபிளிங் லைன்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏற்கனவே பிளாட்பாரம் 1, 1 ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் 1 ஏ பிளாட்பாரத்தில் திருவனந்தபுரம் வழியாக செல்லும் ரயில்களை மட்டுமே இயக்க முடியும். முனையம் விரிவாக்க திட்டத்தில்வாகன பார்க்கிங், பயணிகளுக்கான கழிவறை, குடிநீர் வசதிகள், தங்கும் அறைகள், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாமல் அரைகுறை நிலையில் உள்ளன. ரயில் நிலைய முனைய பணிகள் தாமதமாக நடந்து வருவதால் நாகர்கோவில்சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வர வேண்டிய புதிய ரயில்கள் தள்ளி கொண்டே போகிறது. இந்த பணிகள் ஓரளவு முடிந்தால் தான் புதிய ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பாக இருக்கும் என பயணிகள் கூறுகிறார்கள்.
முனைய விரிவாக்க திட்டத்திற்கான தற்போது பணிகள் நடந்து வருகிறது. இதற்கான நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு நிலத்தை சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது. போதிய மண் கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருவதால், பணிகள் முடிப்பதில் நாட்கள் நீடித்து வருகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வே முனையம் விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதில் 9 தண்டவாளங்கள் வரவுள்ளது. தண்டவாளங்கள் அமைக்கும் இடத்தை கையகப்படுத்தப்பட்டு, அந்த இடத்தில் மண்கொண்டு நிலத்தை சமப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு 4 லட்சம் டன் மண் தேவைப்படுகிறது. குமரி மாவட்டத்தில் அதற்கான மண் இல்லை. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து மண் எடுத்துவரப்படுகிறது. அந்த மாவட்டத்திலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 4 வழிச்சாலை பணி நடந்து வருகிறது.
இதனால் அங்கிருந்து மண் கொண்டுவருவதிலும் சிக்கல் இருந்து வருகிறது. மண் கொண்டுவந்தாலும், குறைந்த அளவே லாரிகள் எடுத்துவரப்படுகிறது. ஒருநாளைக்கு 400 டன் முதல் 800 டன் வரையே மண் கொண்டுவரப்படுகிறது. இப்படி மண் வரும் பட்சத்தில் மண்கொண்டு சமப்படுத்தவே சுமார் 3 மாதத்திற்கு மேல் ஆகிவிடும். பணி தொடங்கிய நாட்களில் இருந்து மண் எந்தவித தடங்கலும் இன்றி கிடைத்து இருந்தால், தற்போது முனையம் விரிவாக்க பணிகள் முழுவதும் முடிந்து இருக்கும். என்றார். மண்போடும் பணி முடிந்தபிறகுதான் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடக்கும். இதனால் முனையம் விரிவாக்க பணி முடிவதில் பல மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
The post 4 லட்சம் டன் மண் தேவை; நாகர்கோவில் ரயில்வே விரிவாக்க பணியில் சிக்கல்: தினமும் 400 டன் மண் வருகிறது appeared first on Dinakaran.