*குறித்த காலத்தில் திறப்புவிழா நடத்த முடிவு
கோவை : கோவையில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை நினைவுகூறும் வகையில், கோவை மாநகரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.
அதன்படி, கோவை மாநகராட்சி சார்பில், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாக பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பூங்கா அமைப்பது எனவும், முதல்கட்டமாக 45 ஏக்கரில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டிற்கு இப்பூங்கா அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இப்பூங்கா அமைக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 07.06.2024 அன்று அடிக்கல் நாட்டினார். அன்று முதல் பணி படுவேகமாக நடந்து வருகிறது. தாவரவியல் பூங்கா, சூரியதகடு, அடையாளங்கள், சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் போன்றவை ரூ.93.44 கோடியில் தயாராகி வருகிறது. மாநாட்டு மையம் ரூ.25.56 கோடியில் தயாராகிறது.
உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வர ரூ.7.83 கோடியில் பணி நடக்கிறது. செம்மொழி பூங்கா வளாகத்தில் தரை தள வாகன நிறுத்துமிடம் ரூ.7.02 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.
செம்மொழி பூங்கா வளாகத்தில் நிலத்தடி நீர்த்தொட்டி கட்டுதல், மழைநீர் வடிகால், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள் ரூ.19.40 கோடியில் தயாராகிறது. மாநாட்டு மையத்திற்கு ஆடியோ மற்றும் வீடியோ அமைப்புகள், தளவாடங்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் ரூ.7.80 கோடியில் தயாராகிறது.
உலகத்தரம் வாய்ந்த இப்பூங்கா இந்தியாவிலேயே தனித்துவத்துடன் பல சிறப்புகளை உள்ளடக்கி, தயாராகி வருகிறது. இங்கு, 22 விதமான தோட்டங்கள் அமைக்கப்படுகிறது. இவை, செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம்தரும் வனம், நறுமண வனம் போன்ற பல வகைப்படும்.
மேலும், பலவிதமான உள்கட்டமைப்புகளும் இதில் அடங்கும். பார்வையாளர்களின் தேவைக்காக இயற்கை அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம், இயற்கை உணவகம் ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகிறது.இங்கு, கட்டப்படும் மாநாட்டு மையத்தின் பரப்பளவு 4,830 சதுர மீட்டர் ஆகும்.
இங்கு, 1,000 பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்களுக்கான தனி வழி, உணவு அருந்தும்கூடம், கூட்ட அரங்கம், விருந்தினர்கள் அறை மற்றும் பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
உக்கடம் கழிவு நீர்சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சுமார் 6 கி.மீ நீளத்திற்கு குழாய் அமைத்து கொண்டு வரப்படுகிறது. தரை தள வாகனம் நிறுத்தும் இடம் 17,007.91 சதுர மீட்டர் பரப்பளவில் வடிவமைக்கப்படுகிறது. இங்கு, 380 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10 எண்ணிக்கையிலான பேருந்துகள் நிறுத்த முடியும்.
தற்போதைய நிலையில், இப்பூங்கா கட்டுமான பணிகள் 85 சதவீதம் நிறைவுபெற்றுள்ளன. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
மீதமுள்ள 15 சதவீத பணிகளை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார். இதுபற்றி அவர் கூறுகையில்,“திட்டமிட்டபடி குறித்த காலத்தில் இப்பூங்கா கட்டுமான பணி முடிக்கப்படும். திறப்பு விழா தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும்’’ என்றார்.
எந்தெந்த பணிகள் நிறைவு..?
* நுழைவு சீட்டு வழங்கும் கட்டிடம் – 75 சதவீதம்
* திறந்தவெளி அரங்கம் – 90 சதவீதம்
* சுற்றுச்சுவர் – 100 சதவீதம்
* கழிப்பிடம் – 3 எண்ணிக்கை – 100 சதவீதம்
* நிலத்தடி நீர்த்தேக்கத்தொட்டி – 100 சதவீதம்
* தோட்டக்காரர்கள் அறை – 80 சதவீதம்
* உணவகம் – 70 சதவீதம்
* நுழைவு வாயில் – 90 சதவீதம்
* சில்லறை விற்பனை நிலையம் – 70 சதவீதம்
ஒட்டுமொத்தமாக 85 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
The post 45 ஏக்கரில் ரூ.167.25 கோடியில் தயாராகிறது செம்மொழி பூங்கா கட்டுமான பணி 85 சதவீதம் நிறைவு appeared first on Dinakaran.