
ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் நியூஸிலாந்து அணி 207 ரன்களைத் தடுத்து ஆட்கொள்ள படாதபாடு பட்டு கடைசியில் நூலிழையில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இது நியூஸிலாந்து அணியின் இந்த சீசனின் முதல் டி20 வெற்றியாகும்.
நியூஸிலாந்து முன்னதாக 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் 7 அதிரடி சிக்சர்களுடன் 78 ரன்கள் விளாசிய சாப்மனின் காட்டடி தர்பாரினால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களைக் குவித்தது. செம அடி வாங்கியவர் மே.இ.தீவுகளின் ஓப்பனிங் ஃபாஸ்ட் பவுலர் ஜெய்டன் சீல்ஸ், இவர் 4 ஓவர்களில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களை வாரி வழங்கி 61 ரன்களை வாரி வழங்கினார். இவருக்கு அடுத்தபடியாக சாத்து வாங்கியவர் ரொமரியோ ஷெப்பர்ட் இவர் 3 ஓவர்களில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 38 ரன்களை தாரை வார்த்தார்.

