back-netanyahu-israel

இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டது. வலதுசாரிக் கட்சியான லிகுட் 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 30-ஐக் கைப்பற்றியிருப்பதன் மூலம், ஆட்சியமைக்கும் வலுவைப் பெற்றிருக்கிறது.

எனவே, இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நான்காவது முறையாகப் பிரதமர் பதவியேற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மத்திய-மிதவாதக் கூட்டணிதான் அதிக தொகுதிகளைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அந்தக் கூட்டணியில் தொழிலாளர் கட்சியும் சியோனிஸ்ட் யூனியன் கட்சியும் இடம் பெற்றுள்ளன. ஆனால், லிகுட் கட்சிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. பாலஸ்தீனர்களின் தனி நாடு கோரிக்கையை ஏற்க முடியாது என்று மறுத்ததாலும், இன அடிப்படையில் வாக்காளர்கள் மனங்களில் அச்சத்தை ஏற்படுத்திய தாலும் யூதர்களின் வாக்குகளைத் தன் பக்கம் அவரால் திருப்ப முடிந்திருக்கிறது. பாலஸ்தீனர்களுடன் பெருமளவுக்குச் சமரசம் செய்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ இஸ்ரேலியர்களில் பெரும் பாலானவர்கள் மனதளவில் தயாராக இல்லை என்பதையே வலதுசாரி களுக்கு அதிக இடங்கள் கிடைத்திருப்பது உணர்த்துகிறது. இந்தத் தேர்தல் முடிவில் தெரியும் ஒரே நம்பிக்கைக் கீற்று, இஸ்ரேலிய இடதுசாரிகளும் அரபுக் கட்சிகளும் இணைந்த ஜாயின்ட் லிஸ்ட் குழுவுக்கு 12 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருப்பதுதான். முன்பைவிட இனி இஸ்ரேலிய அரபுகளின் சார்பில் நாடாளுமன்றத்தில் அதிகக் குரல்கள் ஒலிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

நெதன்யாஹுவின் கட்சிக்குக் கிடைத்த வெற்றி பல நாடுகளை அயர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை களுக்குச் சுமுகத் தீர்வு காணும் முயற்சிகளுக்கு இந்தத் தேர்தல் முடிவு நிச்சயம் ஒரு பின்னடைவுதான். இஸ்ரேலின் நெருங்கிய சகாவான அமெரிக்காவுக்கே இந்தத் தேர்தல் முடிவு பெருமளவில் மகிழ்ச்சியைத் தந்திருக்காது. 2014-ல் காஸா பகுதி மீது குண்டுவீச்சு நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா எவ்வளவோ வற்புறுத்தியும் இஸ்ரேல் கேட்கவில்லை.

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பக்கத்துப் பக்கத்து நாடுகளாகச் சேர்ந்து வாழும் ‘இரட்டை நாடுகள்’ கொள்கையை அமெரிக்கா வெளிப்படையாகவே ஆதரித்தது. ஆனால், பெஞ்சமின் நெதன்யாஹு அதைத் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போதே ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார். இதே யோசனையைச் சில ஆண்டுகளுக்கு முன்னால் தான் முன்வைத்ததை நெதன்யாஹுவே வசதியாக இப்போது மறந்து விட்டார். ஆனால், ஆயிரம் கருத்து வேறுபாடுகள், அதிருப்திகள் இருந்தாலும் இஸ்ரேலின் விருப்பத்துக்கு மாறாக அமெரிக்கா நடந்துகொள்ளாது என்பதுதான் உண்மை. நெதன்யாஹுவின் நட்பு என்பது அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை, வெள்ளை மாளிகை ஆகியவற்றுடன் நின்றுவிடாமல் அமெரிக்காவின் பெரிய இரு கட்சிகளிலும் ஊடுருவியிருக்கிறது. அதிலும் குடியரசுக் கட்சியில் அதற்கு செல்வாக்கு அதிகம்.

நெதன்யாஹுவின் யூத மேலாதிக்க மனப்பான்மை காரணமாக மேற்கத்திய நாடுகளே, பாலஸ்தீனத் தரப்பின் நியாயத்தையும் ஏற்க வேண்டும் என்றும், பாலஸ்தீனர்களின் பகுதியில் சட்டவிரோதமாக யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்தியிருப்பதை அகற்ற வேண்டும் என்றும் கோரலாம். ஐ.நா. சபையின் தீர்மானப்படி பாலஸ்தீன ஆணையத்துக்கு ஒரு நாட்டுக்கு உரிய அங்கீகாரம் தருமாறும் கோரலாம். ஆனால், பாலஸ்தீனர்கள் மீதான வெறுப்பையே பிரச்சார உத்தியாகக் கொண்டிருக்கும் நெதன்யாஹு இவற்றையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டார் என்பதே நிதர்சனம்.

-தி இந்து

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *