சமீபத்தில் அஸாம் மாநிலத்தில் நரபலியிடுவதற்காகக் கடத்தி வைக்கப் பட்டிருந்த நான்கு குழந்தைகள் காவல் துறையினரால் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்த குழந்தை ஒன்றின் பெற்றோர் ஒருவரே இதற்காகத் திட்டமிட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆந்திரத்தில்கூட தங்களது இரண்டு மகள்களையே கடவுளுக்குக் காணிக்கை தருவதாய் நம்பிக்கொண்டு, நன்கு படித்த பெற்றோர்களே அவர்களைக் கொலை செய்திருக்கிறார்கள். சமீபத்தில் திருவாரூரில் சோதிடத்தின் மீதான நம்பிக்கையால் தனது 5 வயது மகனை ஒருவர் கொன்றிருக்கிறார்.
முன் ஜென்மம், அடுத்த ஜென்மம், இறப்புக்குப் பிறகான வாழ்க்கை போன்ற பிறழ்வான நம்பிக்கைகளின் விளைவாக இது போன்ற சம்பவங்கள் இந்தியா முழுவதும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கொலைசெய்யும் அளவுக்கு இல்லையென்றாலும்கூட கிட்டத்தட்ட பெரும்பாலான மக்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லை. தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நவீன காலத்தில்கூட மக்கள் ஏன் இப்படிப்பட்ட பிறழ்வான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள்? அறிவியலையும் தாண்டிய இந்த நம்பிக்கைகள் எந்த விதத்தில் அவர்களுக்குத் தேவையானதாக இருக்கின்றன?
கடவுளின் பொருள்
அமானுஷ்ய சக்தி, பேய், பிசாசு போன்றவற்றின் மீதான நம்பிக்கைகள் ‘உடலும் மனமும் வேறு வேறு’ என்ற கோட்பாட்டிலிருந்துதான் உருவாகிறது. அதாவது, மருத்துவ அறிவியல் வளராத காலகட்டத்தில் ‘மனம்’ என்பதன் மீது ஏராளமான புதிர்கள் இருந்தன. உடலில் உள்ள மற்ற பகுதிகளைக் காண முடிகிறது. ஆனால் மனம் என்ற ஒன்றைக் காண முடிவதில்லை. ஆனால், உருவமற்ற மனம்தான் உடலை இயக்குகிறது. அப்படியென்றால் மனம் என்பது என்ன, அது எங்கிருக்கிறது, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்விகள் எழுந்தபோது, ஆன்மிகவாதிகள் மனதை ‘கடவுளின் பொருள்’ என விவரித்தார்கள். ‘உடலுக்கு அழிவுண்டு, மனம் அழிவதில்லை’ என்று மனதுக்கு ஒரு அமானுஷ்ய சக்தியை அவர்கள் கொடுத்தார்கள். அழிவற்ற மனம்தான் ஆன்மா, ஆவி எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. இறந்த ஒருவரின் உடலை விட்டுப் பிரியும் மனம் அமானுஷ்யமாக மாறிவிடுகிறது என்று நம்பப்பட்டுவந்தது. இதன் நீட்சியாகவே இப்படிப்பட்ட நம்பிக்கைகள் புழக்கத்தில் வந்தன.
கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் இப்படிப்பட்ட ஏராளமான புனையப்பட்ட கதைகள் இருந்தன, ஒரு கட்டத்துக்கு மேல் இந்தக் கதைகள் பெரும்பாலான மக்களால் நம்பப்பட்டு, அவர்களது பண்பாட்டு நம்பிக்கையாகவும் மாறிவிட்டன. நிறுவனமாக்கப்பட்ட மதங்கள், பெருவாரியான மக்களிடம் காணப்பட்ட இந்த நம்பிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு அதன் வழியாக அந்த மதத்தின் வலிமையைக் கூட்டிக்கொண்டன. மதங்கள் இந்த நம்பிக்கைகளை உள்வாங்கிக்கொள்ளும்போது அந்த நம்பிக்கைகள் கேள்வி கேட்க முடியாதவையாகவும், தர்க்கரீதியாக விளக்கத் தேவையில்லாதவையாகவும் மாறிவிடுகின்றன.
இந்த நம்பிக்கைகள் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே பல கதைகளின் வழியாக ஊட்டப்படுகின்றன. அதாவது, சுயமாகச் சிந்திக்கும் வயதை, தர்க்கரீதியான பகுத்தறியும் அறிவைக் குழந்தை பெறுவதற்கு முன்னதாகவே இந்த நம்பிக்கைகள் அவர்களின் மனதில் பதிந்துவிடுகின்றன. இருளின் மீது பரிணாமரீதியாகக் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய அச்ச உணர்வும், இந்த நம்பிக்கைகளும் சேரும்போது இவற்றின் மீதான நம்பகத்தன்மை கூடுகிறது. கல்வியின் வழியாகப் பகுத்தறியும் திறனைப் பின்னாளில் அந்தக் குழந்தை பெற்றாலும்கூட, சிறு வயதிலேயே மனதில் படிந்துவிட்ட இந்த நம்பிக்கைகள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டதாக நிலைத்துவிடுகின்றன.
மனம் என்ற மென்பொருள்
மருத்துவ அறிவியலில் கடந்த நூற்றாண்டுகளில் நடந்த ஏராளமான தொழில்நுட்ப வளர்ச்சிகளின் விளைவாக இன்று மனம் ஓரளவுக்குப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ‘மனம் என்பது உடலின் ஒரு அங்கம், அதற்கு உருவமில்லை; ஆனால், மூளை என்ற வன்பொருளைச் செயல்படுத்தும் மென்பொருள்தான் மனம், அது மூளையின் செயல்பாட்டு அலகு’ என்பதுதான் மனம் தொடர்பான நவீன அறிவியலின் விளக்கமாக இருக்கிறது. மின்சாரம் இயங்கும்போது மட்டுமே மென்பொருளின் செயலை நம்மால் பார்க்க முடியும், அதுபோல சுய நினைவு இருக்கும்போதே மனதின் செயல்பாடுகளை நாம் பார்க்க முடியும். மனிதன் சுய நினைவற்றுப்போகும்போது அல்லது இறந்துபோகும்போது மனமும் அத்துடன் செயலிழந்துவிடுகிறது. அறிவியலின் இந்த விளக்கத்தின்படி, மனம் அழிவற்றது அல்ல, அதுவும் அழியக்கூடியதே. மனம் தொடர்பான இந்தப் புரிதலுக்கு நாம் வந்துவிட்டால், ஆன்மா, ஆவி என்பதற்கெல்லாம் எந்தப் பொருளும் இல்லை என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.
நிறைய நேரங்களில் மூளையில் ஏற்படும் சில நோய்களின் காரணமாகவும், மனப்பிறழ்வின் காரணமாகவும் ஏற்படும் அசாதாரண அனுபவங்களையும்கூட நாம் அமானுஷ்யங்களாக நம்பிவிடுகிறோம். இயல்பாகவே தூக்கத்தின் ஒரு நிலையில் உடல் தசைகள் தற்காலிகமாகச் செயலிழந்துபோவதால் (Sleep paralysis), அந்த நேரத்தில் நம்மால் கைகால்களை அசைக்க முடியாது, குரலெழுப்ப முடியாது; அந்த நேரத்தில் சில மாயத்தோற்றங்கள்கூட (Hallucination) உருவாகலாம். பெரும்பாலான நேரங்களின் இப்படிப்பட்ட அனுபவங்கள் மனப்பிறழ்வின் வெளிப்பாடாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இப்படிப்பட்ட அத்தனை அனுபவங்களுக்கும் மருத்துவரீதியான ஏராளமான விளக்கங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த விளக்கங்களைப் புரிந்துகொள்வதைவிட, ஏற்கெனவே சமூகத்தில் நிலவிவரும் இது தொடர்பான நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வது மக்களுக்கு எளிதான ஒன்றாக இருக்கிறது. அதன் விளைவாக, மனப்பிறழ்வின் காரணமாக ஏற்படும் இந்தக் குணமாறாட்டங்களுக்காக அவர்கள் மருத்துவரை நாடுவதற்கு முன்பு கோயில் பூசாரிகளையும், பேய் ஓட்டுபவர்களையும், செய்வினை எடுப்பவர்களையுமே நாடுகிறார்கள்.
சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலகட்டத்தில், ஏராளமான தகவல்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். உண்மைகளைவிட பொய்யும் புனைவுகளும், வெறுப்பையும் வன்மத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் தகவல்கள்தான் நம்மை மிக வேகமாக வந்துசேர்கின்றன. அதையெல்லாம் அப்படியே நம்புவது, ஏற்றுக்கொள்வது என்பது இந்தச் சமூகத்தின் சமநிலையையும், பரஸ்பர சுமுக உறவையும் பாதிக்கக்கூடியது. எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பண்பை நாம் நமது வாழ்க்கை முறையாக்க வேண்டும். எந்தத் தகவலையும் அறிவியல்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் அறிவியல்பூர்வமான சிந்தனையை வளர்த்தால்தான் எதிர்காலத்தைப் பிறழ்வான நம்பிக்கைகளிடமிருந்து காப்பாற்ற முடியும்.
– சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், எழுத்தாளர்.
source : www.hindutamil.in