நோக் பூட்டு – ப்ளுடூத் பூட்டு

Bluetooth lock (1)

இங்கதான் வச்சிருந்தேன் எங்க போச்சுன்னே தெரியல என்னும் புலம்பலை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். சாவியைத் தொலைத்தவர்களின் புலம்பல் அது. ஏனெனில் பூட்டைப் பூட்டி சாவியை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவது நமது வழக்கம். சாவி தொலைத்து சங்கப்படக் கூடாது என்பதற்காக சில நம்பர் பூட்டுகளும் வந்தன.

ஆனால் நம்பரை மறந்துவிட்டு சூட்கேஸை உடைத்தவர்களும் உண்டு. பூட்டவும் வேண்டும் ஆனால் சாவியும் இருக்கக் கூடாது என்பது ஒரு காலத்தில் ஈடேறாத ஆசை. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. பூட்டலாம் ஆனால் சாவி வேண்டியதில்லை. சாவி இல்லாமலே திறக்கலாம். கேட்கவே நன்றாக இருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இந்தப் பூட்டின் வசதிகள் உங்கள் ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தும்.

Bluetooth lock (2)நோ கீ என்பதன் சுருக்கமாக நோக் எனப்படும் இந்தப் பூட்டு ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் இயங்கும். இந்தப் பூட்டை உங்களிடம் உள்ள ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை இணையத்தில் டவுன்லோடு செய்துகொண்டால் போதும். இரண்டு சிக்னலும் மேட்ச் ஆகும்போது மட்டுமே பூட்டு திறக்கும். இந்தப் பூட்டை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். சைக்கிளில் சென்று சைக்கிளைப் பூட்டலாம், பைக்கைப் பூட்டலாம், ரயிலில் செல்கிறீர்களா? லக்கேஜ்களை ஒன்றாக இணைத்துப் பூட்ட வேண்டுமா? கவலையே இல்லை இந்தப் பூட்டு உங்களுக்குக் கைகொடுக்கும்.

ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு வழிகளில் இயங்கும் போன்களிலும் இந்தப் பூட்டின் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ள முடியும். உங்களது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் பூட்டைத் திறக்க விரும்பினாலும் அதற்கும் வழியிருக்கிறது. ஒரு முறையோ அல்லது எப்போதுமோ அவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்தப் பூட்டை உபயோகப்படுத்தும் வாய்ப்புகள் அந்த அப்ளிகேஷனில் உள்ளது.

யார் யார் எப்போதெல்லாம் பூட்டைத் திறந்தார்கள் எனும் ஹிஸ்டரியையும் அப்ளிகேஷன் மூலம் பார்த்துக்கொள்ளலாம். எனவே பாதுகாப்பு பற்றிப் பயப்பட வேண்டியதில்லை. ஒருவேளை மொபைல் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டால் அந்த நேரத்தில் என்ன பண்ணுவது என்ற கவலையும் வேண்டாம். அதற்கும் பாஸ்வேர்டு செட் செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. நோக் பூட்டில் உள்ள பேட்டரி அதற்குப் பயன்படும். ஸோ, டோண்ட் வொரி.

இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதன் விலை 89 அமெரிக்க டாலர். ஆனால் இப்போதைக்கு 59 அமெரிக்க டாலர். இதுவரை ஒரு லட்சம் டாலர் அளவுக்கு புக்கிங் ஆகிவிட்டது. ஒரு பூட்டு வேண்டுமானாலும் புக் செய்யலாம். இரண்டு, மூன்று, ஐந்து, பத்து என மொத்தமாகவும் புக் செய்யலாம். அமெரிக்காவுக்கு வெளியே என்றால் டெலிவரி சார்ஜாக கூடுதல் 15 டாலர் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *