இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்; சுவிஸ் வங்கி பற்றி அப்புறம் பேசலாம்

black money in Indiaசுப்ரீம் கோர்ட் உத்தவைத் தொடர்ந்து, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க ஒரு சிறப்பு புலனாய்வு பிரிவை, மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் உண்மையில் கறுப்பு பணம் என்றால் என்ன? அதை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகள் என்ன?

உண்மையில் கறுப்பு பொருளாதாரத்தின் ஒரு சிறிய பகுதியே கறுப்பு பணம். கணக்கில் வராத அனைத்து வருமானங்களும் அதை பயன்படுத்துவதும், முதலீடு செய்வதும் கறுப்பு பொருளாதாரத்தை உருவாக்குகிறது. பொதுவாக கறுப்பு பணம் என்றால், லஞ்சம் போன்ற சட்டவிரோத முறைகளில் கிடைக்கப்பெறும் பணம் என்றே கருதப்படுகிறது. உண்மையில் இது கறுப்பு பணத்தில் ஒரு பகுதியே.

எது கறுப்பு பணம்?:

ஒரு ஆசிரியரோ, டாக்டரோ தனிப்பட்ட முறையில் பெறும் வருமானம், சட்டத்திற்கு உட்பட்டதுதான்; ஆனால் அது வருமான கணக்கில் குறிப்பிடப்படவில்லை என்றால், அதுவும் கறுப்பு பணம்தான். இதுபோல் பெரிய அளவில் குறிப்பிடுவதென்றால், ஒரு சர்க்கரை ஆலை உரிமையாளர், கரும்பை குறைவாக எடை போட்டு வாங்குகிறார். அதை சாறு பிழிந்து, சர்க்கரையாக மாற்றி, அதிகாரிகளிடம் குறைவான உற்பத்தி என கணக்கு காட்டி, ஒவ்வொரு கட்டத்திலும் கணக்கில் வராத வருமானத்தைப் பெறுகிறார். இதுவும் கறுப்பு பணமே.

இப்படி தனி நபர் மற்றும் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு் கறுப்பு பணத்தால் உருவாக்கப்படும் கறுப்பு பொருளாதாரத்தில், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தின் அளவுதான் என்ன? இந்திய பொருளாதாரத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாக, கறுப்பு பணமாக இருக்கிறது. இதில் பாதித் தொகை மீண்டும் இங்கேயே முதலீடு செய்யப்பட்டு புழக்கத்தில் இருந்து வருகிறது. சேமிக்கப்படும் மீதித் தொகையில் சுமார் 20 சதவீதமே வெளிநாடுகளுக்கு கறுப்பு பணமாக கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்த தொகையும் ஹவாலா போன்ற பல்வேறு வகைகளில் இந்தியாவுக்கே திரும்பி கொண்டு வரப்படுகிறது.

திசை திருப்பும் முயற்சி:

எனவே வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் முடங்கி கிடப்பதாக கூறுவதே, ஒரு திசை திருப்பும் முயற்சிதான். கறுப்பு பணத்தில் பெரும் தொகை இந்தியாவில்தான் உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முடக்குவதென்பது, அவ்வளவு எளிதான செயல் அல்ல; அவ்வாறு பணத்தை வெளிநாட்டு வங்கிகளுக்கு மாற்ற, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வரி செலுத்த வேண்டும். எனவே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. அந்த தொகை கணக்கில் வராத தொகையாகவோ, வரி செலுத்தப்படாத வருமானமாக இருந்தாலோ, அவர்களை தண்டிப்பதில் தவறில்லை; ஆனால் உண்மையான கணக்குகளை வைத்திருப்போரையும் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை வைத்திருப்போரின் பட்டியலைக் கேட்டால், அந்த வங்கிகளும் பெயர்களைக் கொடுக்கும்; ஆனால் அந்த பெயர்கள் எதுவுமே உண்மையானதாக இருக்காது; கறுப்பு பணத்தைவங்கிகளில் போட்டு வைத்திருப்பவர்கள், தங்களின் உண்மையான பெயர்களிலா கணக்கு வைத்திருப்பார்கள்?

தற்போதைய அரசு, கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. 1948 முதல் இதுவரை 40க்கும் மேற்பட்ட குழுக்கள், கமிஷன்கள் போன்றவை இதற்காக அமைத்தாகி விட்டது; ஆனால் பயனோ பூஜ்யம்தான்.

வழி என்ன?

அப்படியானால் கறுப்பு பணத்தை எப்படிதான் வெளிக் கொண்டு வருவது? உண்மையில் நமது நாட்டில் நிலவும் கறுப்பு பொருளாதாரத்திற்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் கறுப்பு பணத்தை இங்கேயே மீண்டும் சட்ட விரோதமாக முதலீடு செய்து அதிலிருந்து மீண்டும் வருமானம் பெறுவதன் மூலம், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கூடுதல் பயன் பெற்று வருகின்றனர். எனவே அரிசியல் ரீதியான தணிச்சலுடன் தற்போதைய அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முதலில், ஹவாலா போன்ற அனைத்து சட்ட விரோத பண பரிவர்த்தனைகளையும் தடுக்க மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கறுப்பு பணத்தை ஒழிக்க அல்லது குறைக்க பொதுமக்களும், தொடர்ந்து அரசை வற்புறுத்த வேண்டும்.

– டைம்ஸ் ஆப் இந்தியாவில் சுபோத் வர்மா

தினமலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP