கரோனா தாக்குதலைத் தேசியப் பேரிடராக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து, தமிழக அரசும் கரோனா தாக்குதலைத் தொற்றுநோய் என்று அரசிதழில் அறிவித்துள்ளது. இதுவரை, உலகளவில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தியாவில் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாக முன்னெடுப்பதோடு, சிகிச்சைகளுக்கான கட்டமைப்புகளையும் துரிதமாக உருவாக்குவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைப் பொறுத்தவரை, செல்பேசி அழைப்புகளில் ஒலித்துவந்த விளம்பரம் இப்போது தமிழிலும் ஒலிப்பது வரவேற்கத்தக்கது. மார்ச் 31 வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்திருப்பதும், திரையரங்குகளை மூட உத்தரவிட்டிருப்பதும் சரியான முடிவு. சென்னையிலும் மதுரையிலும் நகரின் மையப் பகுதியில் சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் அதன் அபாயத்தையும், தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அமைப்புகளின் அவசியத்தையும் ‘இந்து தமிழ்’ தொடர்ந்து சுட்டிக்காட்டியது. இந்நிலையில், சென்னையில் தாம்பரம் சானடோரியம், மதுரையில் தோப்பூர், ஈரோட்டில் பெருந்துறை, தஞ்சை-திருச்சி இடையே செங்கிப்பட்டி என்று நான்கு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அமைப்புகளை உருவாக்கத் தமிழக முதல்வர் நிதி ஒதுக்கியிருப்பது நல்லதொரு திசைமாற்றம். மக்கள் நெரிசலைத் தவிர்ப்பதற்கு எல்லா நிலைகளிலும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் நோய்த் தாக்குதல் இல்லை என்றும், வதந்திகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறார். கரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அனைவரும் இறப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் ஏற்கெனவே மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்குமே அத்தகைய வாய்ப்பிருப்பதாக அவர் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். கரோனா ஒருவேளை தாக்கினால் அப்போதும்கூட இதையே பதிலாகச் சொல்லிவிடுவாரோ என்ற அச்சமும்கூட எழுகிறது.
சீனாவில் நோய்த் தாக்குதலால் இறந்தவர்கள் வெறும் இரண்டு சதவீதம்தான், மற்ற சில நாடுகளில் அது ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது என்பதும் சுகாதாரத் துறை அமைச்சரின் வாதம். நோய்த் தாக்குதலுக்கு ஆளான ஒரு நகரத்தையே உள்ளிருப்பவர்கள் வெளியே செல்லாத வகையில் முழுமையான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தது சீனா. 2,500 படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவமனைகளைப் பத்தே நாட்களில் உருவாக்கியது. ரோபோடிக்ஸ் உள்ளிட்ட சகல நவீனத் தொழில்நுட்பங்களையும் சிகிச்சையில் பயன்படுத்தியது. இவ்வளவும் செய்ததால்தான் சீனாவில் இறப்பு சதவீதம் இரண்டாக இருந்ததேயொழிய, நோய்த் தாக்குதலின் தன்மையால் மட்டும் அல்ல. நோயின் தீவிரத்துக்கு இத்தாலியையும் நாம் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.
அரசிடமிருந்து நம்பிக்கை வார்த்தைகளை மட்டுமல்ல, துரித நடவடிக்கைகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கேரளாவில் கரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்திருக்கிறது; நோய்க்குறிகளுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை ஐந்து இலக்கத்தைத் தொட்டுவிட்டது. மக்களிடம் எழுந்துள்ள அச்சம் என்பது வதந்திகளின் பெயரால் அல்ல, கேரளா தமிழகத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதையும் தமிழக அரசு உணர வேண்டும்.