திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றிருந்த நேரம். வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தேன். “இந்த அரசு வளர்ச்சித் திட்டங்களில் கட்டாயம் கவனம் செலுத்தும். அதுவேளை, சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதற்கான மதிப்பீட்டை வழங்க இயலும்.” ஈராண்டு முடிந்த நிலையில், அதற்கான நேரம் கனிந்துள்ளது.
‘வளர்ச்சி அரசியல்’: உலகின் பல அரைக் காலனிய நாடுகள் இன்றளவும் உலக நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. எனவே, இந்தியாவில் தேசிய அரசானாலும், மாநில அரசானாலும் அனைத்து ஆளும் கட்சிகளும் பெருங்குழும வணிக நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இயங்கிவருகின்றன.
அவ்வாறுதான் இயங்கவும் முடியும். ஏனெனில், அரசியல் அறிவியலாளர் தாமஸ் ஃபெர்குசன் நம்புவதுபோல, ‘முதலீட்டாளர்களின் கூட்டணியால் அரசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என்பதே யதார்த்தம். ஓர் அரசு தம் கட்டுப்பாட்டை எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கிறது என்பதில் மட்டுமே வேறுபாடு நிலவுகிறது.
இருப்பினும், இந்தப் பொதுச் சூத்திரம் இனி செல்லுபடி ஆகாது. முன்புபோல முழுமையாகப் பெருங்குழுமங்களுக்குச் சாதகமாக இயங்க முடியாத சூழலை இன்று ‘காலநிலை மாற்ற நெருக்கடி’ ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்றுச்சூழல் சிக்கலைக் கவனத்தில் கொள்ளாமல், இனி உலகின் எந்தவொரு அரசும் வெறுமனே, ‘வளர்ச்சி அரசியல்’ செய்ய முடியாது. மீறிச் செய்பவர்களை வரலாறு எதிர்மறையாகப் பதிவுசெய்யக் காத்திருக்கிறது.
குறையும் நம்பிக்கை: மத்திய அரசுக்கு இதுபோன்ற அச்சம் ஏதுமில்லை. தன் முழுக் கடிவாளத்தையும் பெருங்குழுமங்களிடம் ஒப்படைக்கும் நிலைக்கு அது எப்போதோ சென்றுவிட்டது. ஈராண்டு முடிந்த நிலையில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசும் மெல்ல அந்தப் பாதையில் பயணம் செய்ய விரும்புகிறதோ என்கிற அச்சம் தோன்றுகிறது.
இயல்பாகவே திமுக உள்ளிட்ட திராவிட இயக்கக் கட்சிகள் கார்ப்பரேட் சார்பான கொள்கை உடையன என்பது வெளிப்படை. இருப்பினும், தொடக்கத்தில் இந்த அரசு சுற்றுச்சூழலையும் கவனத்தில் கொண்டிருந்தது ஆறுதலாக இருந்தது. குறிப்பாக, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கிய நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
அத்துடன் புதிய காட்டுயிர்க் காப்பிடங்கள், தேவாங்கு, ஆவுளியா போன்ற உயிரினங்களுக்குப் பாதுகாப்பிடங்கள், தமிழ்நாட்டின் பல சதுப்புநிலங்களுக்கு ‘ராம்சார்’ தகுதி வழங்கப்பட்டது என்பன போன்ற தொடர் நடவடிக்கைகள் நம்பிக்கை அளித்தன. ஆனால், அண்மையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் திட்டங்களுக்கான ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023’ அவற்றுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியோ எனக் கருத வைத்திருக்கிறது.
தட்டிக்கழிக்கப்படும் பொறுப்பு: தமிழ்நாடு ஒரு வெப்பமண்டலப் பகுதி என்பதால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளையும், நீர்வளப் பாதிப்புகளையும் கணக்கில் கொள்ளாது திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்கலாகாது. மேற்கண்ட சட்டத்தில் நீர்வளத்துக்குப் பாதிப்பில்லை என்று வழங்கப்படும் வாக்குறுதிகள் நம்பகத்தன்மை அற்றவை. ஏனெனில், நீரின்றித் தொழில்கள் இல்லை.
மேலும், தமிழ்நாட்டின் கடந்த காலத்துச் சுற்றுச்சூழல் வரலாறும் அத்தகைய நம்பிக்கையை நமக்கு அளித்திருக்கவில்லை. ‘ஒரு சொட்டு நீரும் ஒரு பொட்டு மண்ணும் கெடாமல் ஆலை செயல்படும்’ என்ற கவித்துவமான வாக்குறுதியுடன் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையே சிறந்த எடுத்துக்காட்டு.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மூன்று படிநிலைகளைக் கொண்டது: முதலாவது, அறிவியல் நிலை; அடுத்து சமூக நிலை; இறுதியில் அரசியல் நிலை. அறிவியல் நிலையில் காலநிலை மாற்ற ஆபத்து ஆராயப்பட்டு, அறிவியலாளர்கள் அதை உறுதிப்படுத்திவிட்டனர். அடுத்து, அதை மக்களுக்கு உணர்த்தும் சமூகநிலை பொறுப்பைச் சுற்றுச்சூழலியலாளர்கள் செய்துவருகின்றனர்.
ஆனால், இறுதி நிலையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பிலிருந்து அரசியல் இன்னும் விலகியே நிற்கிறது. இதனால்தான், “காலநிலை மாற்றத்தின் யதார்த்தத்தைப் பல அரசியல்வாதிகள் மறுத்துவருகின்றனர்” என்று கவலைப்பட்டார் அறிவியல் ஆய்வறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங்.
அரசியல்வாதிகள் மறுத்தாலும் தன் சமூகநிலை சார்ந்த பொறுப்பைச் சுற்றுச்சூழல்வாதிகள் கைவிட முடியாது. அப்பொறுப்பை அவர்கள் மேற்கொண்டபோது, அவர்களின் மீதான பொறுப்பற்ற தாக்குதலைக் கடலுக்குள் பேனா சிலை அமைக்கும் விவகாரத்தில் காண முடிந்தது. கட்சித் தொண்டர்களே திடீர் சுற்றுச்சூழல் வல்லுநர்களாக மாறியதால், அதுவொரு அரசியல் நிகழ்வாகத் திரிந்தது.
வேறு சிலர் மாலத்தீவு, வளைகுடா நாடுகளின் கடல் கட்டுமானங்களைச் சான்றுகளாகக் காட்டியபோதிலும், இன்றைய தேதியில் அக்கட்டுமானங்களால் விளைந்துள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை விளக்கவோ, வங்கக் கடலின் மணல்பெயர்ச்சிக்கும், பவளக்கடல் அமைப்புக்கும் இடையேயான வேறுபாடுகளை எடுத்துரைக்கவோ முடியாதவாறு சூழலியலாளர்களின் குரல்கள் முடக்கப்பட்டன.
விதிகளின் எதிர்காலம்: ஒரு சிறிய விதிவிலக்கு, வருங்காலத்தில் கடலுக்கு நேரவிருக்கும் ஆபத்துகளுக்கான தொடக்கப்புள்ளியாக இது அமைந்துவிடும் என்பதே சுற்றுச்சூழலியலாளர்களின் நியாயமான கவலை. சான்றாக, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011 பகுதி IV(A)இன்படி வரையறுக்கப்பட்ட பகுதியிலிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு எந்தக் கட்டுமானமும் கூடாது என்பது விதி.
ஆனால், மும்பையில் அரபிக் கடலுக்குள் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க 2015ஆம் ஆண்டில் இவ்விதி திருத்தப்பட்டது. அதே விதியின் கீழ்தான் தற்போது பேனா சிலையும் அமைகிறது. இந்த விவகாரத்தில் பாஜக அமைதி காக்க இதுவே காரணம். இதே சட்டம், பிற்காலத்தில் நிறுவனங்களுக்காகவும் திருத்தி அமைக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இது குறித்துக் கவலைகொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் அமைச்சரோ, “நிலவிலிருந்து பார்த்தால் ‘தமிழ்’ என்ற சொல் தெரியும்படி, நூறு ஏக்கர் பரப்பளவில் காடு வளர்க்கப்படும்” என்று கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். காடு என்பது இப்படி எல்லாம் ‘டிசைன்’ போட்டு வளர்த்துவிடக் கூடியது அல்ல என்பதே அடிப்படை அறிவியல். இப்படி அடிப்படையே சிக்கல் என்கிற நிலையில் சுற்றுச்சூழலியலாளர்களின் பணி மேலும் கடினமாகிறது.
சுற்றுச்சூழல் நீதி: சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை (2022) உச்சி மாநாட்டின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “திராவிட மாடல் என்பது சமூகநீதி மட்டுமின்றி, சுற்றுச்சூழல் நீதியையும் உள்ளடக்கியது” என்று தெரிவித்திருந்தார். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு செய்தி. ஆம், சமூகநீதி என்பது வெறுமனே கல்வி, வேலைக்கான இடஒதுக்கீட்டைப் பற்றிய சொல் மட்டுமன்று.
“சமூகநீதி என்கிற சொல் அயல்நாட்டில் உருவானபோது, அது பாலினம், சுற்றுச்சூழல் சிக்கல்களுக்கும் சேர்ந்த ஒரு சொல்லாகத்தான் உருவானது” என்பார் காஞ்ச அய்லய்யா. சமூகநீதி எப்படி பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதி, பழங்குடி மக்களுக்குப் பாதுகாப்பாக விளங்குகிறதோ, அதே மக்களைப் பாதுகாக்கவே சுற்றுச்சூழல் நீதியும் செயல்பட வேண்டும். ஏனெனில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் தொடர்ந்து பாதிப்பைச் சந்திப்பது மேற்கண்ட பிரிவு மக்களே.
ஆக, சமூகநீதி என்பது சுற்றுச்சூழல் நீதியையும் உள்ளடக்கியதே. எனவேதான், சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் புறக்கணிக்கும் எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் நேரடியாக சமூகநீதியைப் பாதிக்கும் திட்டமே. இதை அரசு கவனத்தில் கொண்டால் மட்டுமே, அது நேர்மையான ‘திராவிட மாடல்’ அரசாக விளங்க முடியும்.