தலைநகர் டெல்லியில் நடந்த கலவரமும் தொடர் வன்முறைகளும் 48 உயிர்களைப் பறிக்கும் அளவுக்கு மூன்று நாட்களுக்கு நீடித்ததானது நாட்டில் அரசைத் தாண்டிய அதிகாரத்தை இன்று வன்முறைக் கும்பல்கள் பெற்றுவருவதையே பிரகடனப்படுத்துகிறது. டெல்லியின் காவல் துறையை மத்திய அரசே தன் கைகளில் வைத்திருக்கும் நிலையில், நடந்த கலவரத்துக்கு மத்திய அரசே பிரதான குற்றவாளியாகிறது. பெரும் வன்முறைகள் ஏற்படுவதற்கான சூழல்கள் உருவாகிவந்ததைச் சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியான பல செய்திகள் சுட்டிக்காட்டின. ஆயினும், வன்முறைகளைத் தடுப்பதற்கான முன்கூட்டிய தீவிர நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்படவில்லை; வன்முறையாளர்களை ஒடுக்குவதற்கான தீவிர நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்படவில்லை. அப்படி எடுக்கப்பட்டிருந்தால், இவ்வளவு உயிரிழப்புகளையும் சேதங்களையும் டெல்லி சந்தித்திருக்காது.
சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் டெல்லியில் தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன. அரசு இந்த விஷயத்தில் இறங்கிவருவதாகத் தெரியவில்லை. ஆளுங்கட்சியும் அதே திசையில் சிந்திக்கும் அமைப்புகளும் பதிலுக்கு எதிர்ப் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் இருக்கின்றன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு ஜனநாயகச் சமூகத்தில் போராட்டங்கள் அமைதியாக அனுமதிக்கப்படவும் வேண்டும்; அதேசமயம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்திடாத அமைதிச் சூழலும் உறுதிசெய்யப்பட வேண்டும். நம்முடைய காவல் துறை உள்ளிட்ட அரசாங்க அமைப்புகள் இதற்கேற்ற ஆற்றலைக் கொண்டிருக்கவே செய்கின்றன. கடந்த கால் நூற்றாண்டில் எவ்வளவோ போராட்டங்களை டெல்லி சந்தித்திருக்கிறது. எதுவும் இப்படியான கலவரம் நோக்கி நகர்த்தப்பட்டதில்லை. ஆனால், அமைப்புகள் சுயாதீனமாகச் செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்றால், ஒரு சமூகம் எவ்வளவு சீரழிவுகளைச் சந்திக்கும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் வழி பார்க்கிறோம்.
டெல்லி காவல் துறை சமீப காலத்தில் தொடர் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்க முக்கியமான காரணம் பல சந்தர்ப்பங்களில் அது கை கட்டி நிற்க வேண்டியிருப்பதாகும். காவல் துறையை நோக்கி வன்முறையாளர்கள் துப்பாக்கியை நீட்டுவது என்பது டெல்லியில் சர்வ சாதாரணமாகிவருவது இன்றைய சூழலுக்கான ஒரு குறியீடு. இரு தரப்பாரும் இதில் விதிவிலக்கல்ல என்பதையே அடுத்தடுத்த சம்பவங்கள் காட்டுகின்றன. இந்தக் கலவரத்தினூடாகக் கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரி அங்கீத் ஷர்மாவின் உடலில் நானூறு இடங்களில் கத்திக்குத்து இருந்ததாகச் சொல்லப்படுவது, நாட்கள் எவ்வளவு கொடூரமாகிவருகின்றன என்பதற்கான சான்று. அரசு ஊழியர்களைப் பகடைக்காய்கள் ஆக்கிவரும் ஆட்சியாளர்களே இதற்கான காரணம். மத்தியில் ஆளும் பாஜக பிரமுகர்களின் வெறுப்பை உமிழும் பேச்சு ஆவணப் பதிவுகளை டெல்லி நீதிபதிகள் நீதிமன்ற வளாகத்திலேயே ஒளிபரப்பி, காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதானது வரலாற்றில் நிலைத்திருக்கும். சட்டப்படியான ஆட்சி எனும் அடிப்படை விழுமியத்தையே இந்நாட்களில் நம்முடைய அரசின் நிறுவனங்கள் மறக்க நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
அமெரிக்க அதிபர் வருகை தந்திருந்த நாட்களிலேயேதான் இவ்வளவு வன்முறைகளும் நடந்துகொண்டிருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படும் வரை பிரதமர் மோடியோ உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ எதுவும் பேசவில்லை; அதனாலேயே சம்பவங்கள் உலகின் கவனத்துக்குச் செல்லாமல் இல்லை; எல்லாமும் சர்வதேச செய்திகள் ஆயின. வெறுப்பும் வகுப்புவாதமும் தலை தூக்கும்போது அதற்கான எல்லைகளை எவராலும் வரையறுத்துவிட முடியாது என்பதுதான் முக்கியமான செய்தி. கும்பல்கள் அதிகாரம் பெறுவது நாட்டையே சீரழிவில் தள்ளிவிடும். அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் நிலைமை இப்போது சீரடைந்துவருகிறது என்பது ஆறுதல். ஆனால், இனி இத்தகைய அவலம் நேரக் கூடாது என்றால், வன்முறையாளர்கள் வேரறுக்கப்பட வேண்டும். அதற்கேற்ற உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.