இந்தியா, கல்வி, விமர்சனம்

நீட் ஒரு தலைகுனிவு

ஒன்றிய அரசின், கல்வி அமைச்சகத்தின் கீழ் தேசிய தேர்வு முகமை சார்பில் பல்வேறு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேசிய தேர்வு முகமை சமீப காலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடு புகார் எழுந்தது. இது விஸ்வரூபமான நிலையில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழலில்தான், கடந்த 18ம் தேதி நாடு முழுவதும் யுஜிசி நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தியது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துணை பேராசிரியர் பணி மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பெறுவதற்கான இந்த தேர்வு திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிவித்துள்ள ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம், ‘‘ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இந்தியன் சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு சென்டர் அனுப்பிய தகவலை தொடர்ந்து, இந்த தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளது. யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் எனக்கூறி மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யுஜிசி நெட் 2024 தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் டார்க்நெட்டில் கசிந்துள்ளது. டார்க்நெட் என்பது பிரத்யேகமான இணையமாகும். இதனை பயன்படுத்தி பல முறைகேடுகள் நடந்து வருகிறது. போதைப்பொருள் விற்பனை உள்பட பல குற்றச்செயல்கள் டார்க்நெட் வழியாகத்தான் நடக்கிறது. அப்படித்தான் யுஜிசி நெட் ேதர்வு வினாத்தாளும் கசிந்திருக்கிறது. இதை ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உறுதி செய்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘டார்க்நெட்டில் யுஜிசி நெட் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பாகவே கசிந்துள்ளது. இந்த வினாத்தாளும், தேர்வு வினாத்தாளும் ஒன்றாக உள்ளது. இதனால் தேர்வை ரத்து செய்துள்ளோம். இந்த பிரச்னைக்கு நாங்கள் முழு பொறுப்பு ஏற்கிறோம். விரைவில் புதிய தேர்வு நடத்தப்படும்’’ எனக் கூறி இருக்கிறார். இது தொடர்பாக ஒன்றிய அரசின் சிபிஐ, சூட்டோடு சூட்டாக எப்ஐஆர் பதிவு செய்து, தனது விசாரணையை துவக்கியுள்ளது. இப்படி ‘மிஸ்டர் கிளீன்’ என கூறிக்கொள்ளும் ஒன்றிய மோடி அரசின் மோசடிகள் சமீப காலமாக ஒவ்வொன்றாக வெளிவர துவங்கியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக எந்த தவறு செய்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் மனப்பான்மை ஒன்றிய மோடி அரசிடம் இருந்ததில்லை. ஆனால் தற்போது யுஜிசி நெட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் ஒருவரே தவறை வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. நீட் தேர்வாக இருந்தாலும் சரி, நெட் தேர்வாக இருந்தாலும் சரி, தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என ஒத்துக்கொள்கிற நிலை ஒன்றிய மோடி அரசுக்கு உருவாகி இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ‘‘தனிப்பெரும்பான்மை இல்லை, ஆட்சி கவிழ்ந்துவிடும்’’ என்ற அச்சம்தான். இதுவரை அதிகார பலத்தால், தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட ஒன்றிய அரசுக்கு இந்த தேர்வு மோசடி விவகாரம் தலைவலியை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *