மரபணு மாற்றப்பட்ட ஆபத்தான உணவுக்கு மறைமுக அனுமதி?

இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI), அதன் அடிப்படைப் பணியான, பாதுகாப்பான – ஆரோக்கியமான உணவை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்துவது சார்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. மரபணு மாற்றப்பட்ட உணவு தொடர்பான வரைவு விதிமுறைகள் என்ற பெயரில், மற்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட உணவு இந்தியாவிலும் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருபுறம் பிரதமர் மோடி வேதியியல் ஆய்வகங்களிலிருந்து விவசாயத்தை வெளியேற்ற வேண்டும், இயற்கை விவசாயத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நேரத்தில்தான் மரபணு மாற்றப்பட்ட உணவுக்கு ஆதரவான இந்த விதிமுறை முன்மொழியப்பட்டுள்ளது!

மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றிய வரைவு விதிமுறைகளை உணவுப் பாதுகாப்பு ஆணையம் 2021 நவம்பர் 15-ம் தேதி அறிவித்தது. வரைவு விதிமுறைகளுக்கு எதிரான குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கின. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இந்த வரைவு விதிமுறைகளை வெளியிட வேண்டும், மக்கள் கருத்து தெரிவிக்க வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 5 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடரும் விவாதம்

உலகின் மொத்த பயிரிடும் பரப்பில் 3% மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். உலகின் பெரும்பாலான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்/உணவைத் தடைசெய்துள்ளன. மரபணு மாற்றப்பட்ட உணவு பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது எனப் பல அறிவியல் ஆய்வுகள் பதிவுசெய்துள்ளன. மரபணு மாற்றப்பட்ட உணவானது நோய் எதிர்ப்புத் திறன், இனப்பெருக்க நலன், முக்கிய உறுப்புகள் – அவற்றின் செயல்பாடு, ஓர் உயிரினத்தின் வளர்ச்சி போன்றவற்றோடு சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.

அத்தகைய உணவால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பல நாடுகளில் அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தாண்டி வர்த்தகப் பாதுகாப்பு, விவசாயிகளின் விதை இறையாண்மை, வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றுக்கும் இவை ஆபத்தாகவே உள்ளன. இந்த ஆபத்துகள் குறித்து 400-க்கும் மேற்பட்ட ஆய்வுகள், பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வறிக்கைகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்/உணவின் தீய விளைவுகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. மரபணு மாற்றப்படாத இந்திய உணவுக்கான கூட்டமைப்பும், பல நாடுகளைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்புகளும் இத்தகைய நஞ்சு உணவு தேவையில்லை என்று அறிவித்துள்ளன.

ஆனால், உணவுப் பாதுகாப்பு ஆணையமோ மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றி விழிப்புணர்வு இல்லாத, அந்த உணவை விரும்பாத மக்கள் மீது பாதுகாப்பற்ற உணவைத் திணிப்பதற்கான எளிதான வழிமுறைகளை முன்மொழிந்துள்ளது. 2006 மே, ஜூலை மாதங்களில் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீதான விவாதத்தின்போது, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்திருந்தனர். மரபணு மாற்றப்பட்ட உணவு, பொதுவாகவே உணவு முறைகளின் கார்ப்பரேட்மயமாக்கல் குறித்தும் அவர்கள் கவலையை வெளியிட்டிருந்தனர். ஏழைகளுக்கான உணவு, நஞ்சில்லா உணவு, இயற்கை உணவு உற்பத்தி செய்பவர்களுக்கு ஆதரவு போன்றவற்றை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்பட்ட சட்டத்திலோ பிரிவு 22-ன்கீழ், மரபணு மாற்றப்பட்ட உணவு, இயற்கைமுறை உணவு ஆகிய இரண்டும் ஒரே விதியில் இணைக்கப்பட்டிருந்தன!

நீளும் சர்ச்சைகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 2021 ஜூன் மாதம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியில், 500 டன் மரபணு மாற்றப்பட்ட அரிசி என்று கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டது. ஏற்கெனவே, 2012-ல் இதேபோல் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி, மரபணு மாற்றம் செய்யப்பட்டது எனக் கண்டறியப்பட்டது.

இப்படி உள்நாட்டிலும் வெளிநாட்டு ஏற்றுமதியிலும் சட்டவிரோதமாக வலம்வரும் மரபணு மாற்றப்பட்ட உணவை ஒழுங்குபடுத்துதல் குறித்த கேள்விகளும் குடிமை அமைப்புகளின் புகார்களும் இருக்கும்போதிலும், மரபணு மாற்றப்பட்ட உணவைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை வெளியிடுவது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையம் கவலைப்படவில்லை.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அந்த அமைப்பு உறுதியளித்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசியாக நவம்பர் 2021-ல்தான் வரைவு விதிமுறைகளையே வெளியிட்டுள்ளது. வரைவு விதிமுறைகளில், இரண்டு வகையான மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை ஒழுங்குபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், உணவில் உயிரிப் பாதுகாப்பு (biosafety) சார்ந்த மதிப்பீடு எப்படிச் செய்யப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை. முன்மொழியப்பட்ட விதிமுறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில், மற்ற நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இங்கும் ஒப்புதலுக்கான அடிப்படையாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் குறித்த வழிகாட்டுதலில் பாதுகாப்பு நிபுணர்கள் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தொழில் துறை, சில்லறை வணிகம், விவசாயிகள், நுகர்வோர் பிரதிநிதிகள், அமைச்சகப் பிரதிநிதிகளை இந்தக் குழு கொண்டுள்ளது. உயிரியல் பாதுகாப்பு மதிப்பீடு அடிப்படையில் ஒப்புதலோ நிராகரிப்போ அமையும் என்று கூறப்பட்டிருந்தாலும், அந்த உயிரியல் பாதுகாப்பு மதிப்பீடு எப்படி நடைபெறும், நீண்ட கால சோதனை, விரிவான சோதனை முறைகள் என்னென்ன என்பதைக் கோடிட்டுக் காட்டும் எந்த வழிகாட்டுதலும் இல்லை.

சுருக்கமாக இந்தக் குழுவுக்குத் தேவையான பாதுகாப்பு சார்ந்த நிபுணத்துவம் சிறிதளவுகூட வெளிப்படவில்லை; சட்ட விரோதமாக மரபணு மாற்றப்பட்ட உணவு விற்பனை பற்றியோ, ஒரு பயிருக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு ஏற்படும் கேடுகளைக் கவனிக்கவோ, முன்னெச்சரிக்கைக் கண்காணிப்பு சார்ந்த முன்னேற்பாடு பற்றியோ எந்தக் குறிப்பும் இந்த வரைவில் இல்லை. உண்மையில், இந்த வரைவு விதிமுறைகள் ஏற்கெனவே EPA 1986-ன் கீழ் உள்ள மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் (GEAC) குறைபாடுள்ள ஒழுங்காற்று விதிமுறைகளைக் கூடுதலாகப் பலவீனப்படுத்துகின்றன.

பொறுப்பு அவசியம்

இந்திய அரசமைப்பின்படி பொதுச் சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மாநில அரசுகளின் கருத்து, கொள்கைகள் குறித்து இந்த வரைவு விதிமுறைகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெரும்பான்மை மாநிலங்கள் மரபணு மாற்றப்பட்ட உணவு/பயிர்களை எதிர்க்கின்றன. அத்தகைய மாநிலங்களில் மரபணு மாற்றப்பட்ட உணவை, உணவுப் பாதுகாப்பு ஆணையம் எவ்வாறு தடுக்கப் போகிறது?

வேளாண் வணிகம், உணவுத் தொழில் துறையின் மறைமுகத் திட்டத்தை இந்த வரைவு விதிமுறைகள் வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் மட்டுமே பலன் பெறும். உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகள் ஏற்படுத்தும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு பெற வேண்டிய நேரம் இது.

அத்துடன் மரபணு மாற்றப்பட்ட உணவோ பயிரோ தனக்குத் தேவையில்லை என நினைக்கும் ஒவ்வொரு தனிநபரின் விருப்பத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய கடமை உணவுப் பாதுகாப்பு ஆணையத்துக்கு உண்டு. எனவே, நமது உணவுத் தட்டுக்கு எது வந்து சேர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கத் தனிநபராகவோ, அமைப்பாகவோ, விவசாயக் குழுவாகவோ [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 5) கருத்தைத் தெரிவிக்க வேண்டிய நேரம் இது.

அதே நேரம், உணவுப் பாதுகாப்பு ஆணையத்துக்குக் கூடுதல் பொறுப்புகள் உள்ளன. அனுமதிக்கப்படாத மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கும் விதிமுறைகளை அறிவிக்க வேண்டும். ஒரு புறம் மரபணு மாற்றப்பட்ட உணவு எளிதாக நுழைவதற்கு வசதியாக விதிமுறைகளை அறிவித்துள்ள ஆணையம், குழந்தை உணவில் மரபணு மாற்றப்பட்ட உணவுக்கு அனுமதி இல்லை என்கிறது.

குழந்தைகளுக்கு ஒவ்வாத மரபணு மாற்றப்பட்ட உணவு பெரியவர்களுக்கு மட்டும் எப்படிச் சரியாக இருக்கும்? அனைத்து மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கும் இதே முன்னெச்சரிக்கை அணுகுமுறை பின்பற்றப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் நலன், சுற்றுச்சூழல், விதை இறையாண்மை, பயிர்ப் பன்மை, உழவர் வாழ்வாதாரம், பொது ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாக்கப்படும்.

TAG : Genetically modified dangerous food

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *