பெர்த்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாததால் இந்திய அணியானது வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் களமிறங்குகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் 2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்றிருந்தது. இதனால் இம்முறையும் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சந்திக்கிறது இந்திய அணி. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்கக்கூடும். ஷுப்மன் கில் காயம் அடைந்துள்ளதால் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.