in , ,

இராக்கும் இந்தியாவும்

 Iraq and India

இராக் மீண்டும் தலைப்புச் செய்தியாகி விட்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் பல்லுஜாவைக் கைப்பற்றிய சன்னி முஸ்லிம் தீவிரவாதக் குழுவினர், இப்போது திக்ரித்தையும், இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலையும் கைப்பற்றியிருக்கின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எல். என்று தங்களை அழைத்துக் கொள்ளும், அல் கொய்தாவிலிருந்து பிரிந்து வந்த இந்தத் தீவிரவாதக் குழுவினரின் குறிக்கோள், சன்னி முஸ்லிம் பிரிவினர் அதிகமாக வாழும் கிழக்கு சிரியாவும் மேற்கு இராக்கும் இணைந்த இராக் லெவான்ட் என்கிற இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது.

அடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில், இராக்கின் வரைபடம் இப்போது இருப்பதுபோல காணப்படுமா என்பது சந்தேகமே. சிரியாவில், எப்படி தலைநகரையும் அதைச் சுற்றியுள்ள சிறிய பகுதியில் மட்டும் சிரிய அரசின் ஆதிக்கம் இருக்கிறதோ, அதேபோல, இராக்கிலும் பெரும்பான்மை பகுதிகள் பல்வேறு தீவிரவாதக் குழுக்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாக மாறிவிடக்கூடும்.

இன்றைய இராக் என்பது வடக்கில் துருக்கி, கிழக்கில் ஈரான், தென் கிழக்கில் குவைத், தெற்கில் சவூதி அரேபியா, தென் மேற்கில் ஜோர்டான், மேற்கில் சிரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட, பாரசீக வளைகுடாவில் வெறும் 58 கி.மீ. நீளம் மட்டுமே உள்ள கடற்கரையைக் கொண்ட ஒரு மத்திய ஆசிய நாடு. வடமேற்கிலிருந்து தென் கிழக்காக ஓடும் டைகிரிஸ், யூப்ரடீஸ் நதிகள், பாலைவனத்தால் சூழப்பட்ட ஏனைய மத்திய, மேற்காசிய நாடுகளுக்கு மத்தியில் இராக்கை பசுமை நிறைந்த வளமான விவசாய பூமியாக்குகின்றன.

இராக், ஷியா முஸ்லிம் பிரிவினர் அதிகமாக வாழும் நாடு. குர்த் மற்றும் சன்னி முஸ்லிம்கள் இங்கே சிறுபான்மையினர். சதாம் ஹுசேனின் ஆட்சியில் சிறுபான்மையினரான சன்னி முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் பெருவாரியான ஷியா முஸ்லிம் பிரிவினர் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டனர். இப்போது ஷியா பிரிவினரின் ஆட்சியில் நிலைமை தலைகீழாகி இருக்கிறது.

இராக், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளின் துணையோடு மேற்காசியாவில் ஷியா ஆதிக்கத்தை ஈரான் நிறுவத் துடிக்கிறது என்பது சவூதி அரேபிய நாடுகளின் தலைமையிலான சன்னி முஸ்லிம் அரசுகளின் கருத்து. நஜப், சர்பாவா என்கிற ஷியா முஸ்லிம் பிரிவினரின் இரண்டு முக்கியமான புனிதத் தலங்கள் இராக்கில் இருப்பதால், அதைத் தங்களது ஆதிக்கத்திலிருந்து விட்டுவிட ஷியா பிரிவினர் தயாராக இல்லை. மீண்டும் இராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் ஷியா பிரிவினரின் ஆளுமையிலுள்ள ஈரானும் குறியாக இருக்கிறது.

இராக்கின் தற்போதைய அதிபர் நௌரி அல் மாலிக்கி, முந்தைய சதாம் ஹுசேன் ஆதரவாளர்களையும், சன்னி முஸ்லிம் பிரிவினரையும் பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டதும், அவர்களை அரவணைத்துச் செல்லாததும்தான் இப்போதைய பிரச்னைக்கே காரணம். சன்னி முஸ்லிம் தீவிரவாதக் குழுவான ஐ.எஸ்.ஐ.எல்.லுடன் இராக் ராணுவத்தில் இருக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த வீரர்களும், தளபதிகளும் இணைந்து போராடுகிறார்கள். மனம் தளர்ந்த நிலையில் இராக் அரசின் படைகளும், சதாம் ஹுசேன் ராணுவத் தளபதிகளின் வழிகாட்டுதலில் ஐ.எஸ்.ஐ.எல். வீரர்களும் போரிடுவதால்தான் அவர்களால் இந்த அளவுக்கு முன்னேற முடிந்திருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இராக் பிரச்னையில் அமெரிக்காவும், ஈரானும் இணைந்திருப்பதுதான். தார்மிக ஆதரவு இராக்குக்கு இருந்தாலும், ஆயுத உதவிகள் செய்வதில் அமெரிக்கா தயக்கம் காட்டுகிறது. தனது ஆயுத உதவி தீவிரவாதிகளான எதிரிகளின் கையில் சேர்ந்து விடுமோ என்று அமெரிக்கா பயப்படுகிறது. சவூதி அரேபியா போன்ற சன்னி முஸ்லிம் நாடுகள் ஐ.எஸ்.ஐ.எல்.லின் வெற்றியை மனதிற்குள் நினைத்து மகிழ்ந்தாலும், அதுபோன்ற தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சி மத்திய கிழக்கு ஆசியாவின் அமைதியைக் குலைத்துவிடும் என்று பயப்படுகின்றன.

ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகளால் பாக்தாதைக் கைப்பற்ற முடியாமல் போனாலும் இராக்கைக் கூறு போட முடியலாம். அதன் மூலம் மத்திய ஆசியாவில் நிரந்தரமாக குழப்பம் நிலவக் கூடும். தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரிக்கக்கூடும். உலக அமைதியை அது பாதிக்கவும் செய்யும்.

இந்தியாவைப் பொருத்தவரை, இராக்கில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்பு கவலை அளிக்கிறது. தீவிரவாதம் அதிகரித்தால் அதன் பாதிப்பும் நமக்குத்தான். நாம் மத்திய கிழக்கு, மேற்காசிய நாடுகளைத்தான் நமது பெட்ரோலிய எண்ணெய்த் தேவைக்கு நம்பியிருக்கிறோம். பெட்ரோலி எண்ணெய் விலை அதிகரிப்பு இந்தியாவில் விலைவாசி அதிகரிப்புக்கு வழிகோலும்.

இந்தப் பிரச்னையில் மட்டும், தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்!

தினமணி

சூரிய ஆற்றலில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம்

வெளிநாடுகளில் உள்ள இந்திய கறுப்பு பணத்தின் அளவு ரூ.120 லட்சம் கோடி : ஆய்வில் தகவல்