in , , ,

பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏன் இவ்வளவு பொறுப்பின்மை?

கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு முழு வீச்சில் போய்க்கொண்டிருந்தாலும் நாள்தோறும் புதிய தொற்றுக்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்தக் கிருமியை எதிர்கொள்வதற்கான எந்த வியூகத்திலும் ஒரு விஷயம் முக்கியம், அது பரிசோதனை. அதில் இந்தியா காட்டிவரும் தாமதமும் மெத்தனமும் மிகுந்த சங்கடத்தை அளிக்கின்றன.

கரோனா தொடர்பில் ஜனவரியிலேயே உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைகள் வந்துவிட்ட நிலையில், அப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நம்முடைய அரசுகள் திட்டமிட்டிருக்க வேண்டும். தாமதமாக, மார்ச் இறுதியில் கரோனாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளில் இறங்கிய அரசுகள் தடதடவென ஊரடங்கை அறிவித்தன. இந்த ஊரடங்குக்கு மக்கள் கொடுத்துவரும் விலை அதிகம்; ஆயினும், அவர்களின் உயிர் காக்கும் பொருட்டே ஊரடங்கை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்திலேயே நம்மிடம் உள்ள பரிசோதனைக் கருவிகளின் எண்ணிக்கையை உயர்த்தியிருந்தால், கிருமிக்கு எதிரான செயல்பாட்டில் இந்த ஒரு மாத காலம் மிகுந்த பயனைத் தந்திருக்கும். ஒன்றிய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி; ‘ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ்’ எனப்படும் துரிதப் பரிசோதனைக் கருவியையே பெரிதும் நம்பியிருந்தன. சில நாட்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்தக் கருவிகளைக் கொண்டு நோயாளிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில் பெரும்பாலானவை தவறான முடிவுகளைக் காட்டியது நாடு முழுவதிலும் சர்ச்சையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. கூடவே, இந்தக் கருவிகளைக் கூடுதல் விலைக்கு வாங்கியிருப்பதாக வரும் தகவல்கள் கவலை தருகின்றன. அதேநேரத்தில், வாங்கியிருக்கும் அத்தனை கருவிகளையும் திருப்பி அனுப்பவிருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

இது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வழக்கமான காலகட்டத்தைவிடவும் கூடுதல் முக்கியமானது. சத்தீஸ்கர் மாநில அரசு தென் கொரிய நிறுவனத்திடமிருந்து ரூ.337-க்கு வாங்கியிருக்கும் பரிசோதனைக் கருவியை இந்திய அரசும் தமிழக அரசும் ரூ.600-க்கு சீன நிறுவனத்திடம் வாங்கியிருப்பதன் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுகுறித்த வழக்கொன்றில் தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம் அதிகபட்சமாக இந்தக் கருவிக்கு ரூ.400-ஐ விலையாக நிர்ணயிக்கலாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது மட்டும் அல்ல; இந்தப் பிரச்சினையின் பின்னுள்ள பனி படர்ந்த இடங்களையும் விளக்குகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவதோடு, தவறுகள் கண்டறியப்படின் கடும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும். எல்லாத் தகவல்களும் மக்களுக்குச் சந்தேகத்துக்கு இடமின்றி அளிக்கப்பட வேண்டும்.

News Source

அமைதியாக இருந்த அரபிகளையே அப்சட் ஆக்கிய சங்கிகள்

மாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை