திமுகவிலிருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்

karunanidhi

திமுகவிலிருந்து அக் கட்சியின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மு.க.அழகிரி தாற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் திமுக தலைமையையும், கட்சியின் முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், திமுகவுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் திமுகவிலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து மு.க.அழகிரி ஜனவரி 24-ஆம் தேதி தாற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.

திமுக கூட்டணியில் சேர இருந்த கட்சிக்கு (தேமுதிக) எதிராகப் பேசியதுடன், திமுகவினர் சிலர் மீது, பி.சி.ஆர் எனும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கும் காரணமாக இருந்ததாகக் கூறி, மு.க.அழகிரி அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனாலும் அழகிரி தொடர்ந்து திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார்.

திமுகவில் பணம் பெற்றுக்கொண்டே மக்களவைத் தேர்தலுக்கான சீட்டுகள் வழங்கப்பட்டன என்றும், திமுகவின் சொத்துகளை ஸ்டாலின் அபகரிக்க முயற்சிக்கிறார் என்றும் அழகிரி குற்றம்சாட்டி வந்தார்.

மேலும் பாஜகவின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை அழகிரி சந்தித்துப் பேசினார்.

இதில், வைகோ அழகிரியின் இல்லத்துக்கே சென்று பேசியது, திமுக தலைமைக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதில் அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியது:- திமுகவிலிருந்து அழகிரி தாற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார். அவர் அதற்கு உரிய விளக்கங்களை அளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருவதுடன், திமுக தலைவர்களைப் பற்றியும் அவதூறு கூறி வருகிறார். இதனையடுத்து க.அன்பழகனும் நானும் கலந்து பேசி அழகிரியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளோம் என்று கருணாநிதி கூறினார்.

முதல் முறையாக நிரந்தர நீக்கம்: திமுகவிலிருந்து மு.க.அழகிரி 2000-ஆம் ஆண்டு தாற்காலிமாக நீக்கம் செய்யப்பட்டார். அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் ஒருவருக்கு சீட்டு தரவில்லை என்று திமுக தலைமைக்கு எதிராக அழகிரி பேசினார். அதேவேளையில் அப்போது நடைபெற்ற முப்பெரும் விழாவில் அழகிரியின் ஆதரவு பெற்ற மாவட்டச் செயலாளர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதன் காரணமாக அப்போது அழகிரி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு இந்த ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி இரண்டாம் முறையாக நீக்கப்பட்டார். ஆனால், இப்போதுதான் முதல் முறையாக அழகிரி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

அன்று எம்.ஜி.ஆர்., வைகோ: இன்று அழகிரி!

திமுகவைப் பொருத்தவரை யாரையும் நிரந்தரமாக நீக்கம் செய்யும் முறை இல்லை. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால், தாற்காலிக நீக்கம் செய்வதுடன், விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அப்படி விளக்கம் கேட்டும் பதில் தராவிட்டால், சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காலம் நீடித்துக் கொண்டே செல்லுமே தவிர, நிரந்தரமாக நீக்கம் செய்யப்படாது. இதற்கிடையில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து கட்சியில் சேருபவர்களும் உண்டு. கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிக்குச் செல்பவர்களும் உண்டு. ஆனால் இந்த நடைமுறையை மீறி திமுகவில் இருந்து 1972-ல் எம்.ஜி.ஆர். நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு 1993-ல் வைகோ நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டார்.

தற்போது 2014-ல் மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தார். வைகோ மதிமுக கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP